சென்னை: தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

காவல்துறையினரின் மெத்தனம், வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் செயல்படுவது போன்ற பல காரணங்களால் அதிருப்தி அடைந்த நீதிபதி வேல்முருகன், வழக்கு விசாரணை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உள்துறை செயலாளர் தீரஜ் குமாருக்கு உத்தரவிட்டார்.
ஆனால், தீரஜ்குமார் உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், அவர் சார்பில் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் நேற்று (ஜனவரி 31) அன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை யின்போது, தீரஜ்குமார் ஆஜராக விலக்கு கோரப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி விசாரணைக்கு ஆஜராகாத தீரஜ்குமாருக்கு பிடிரவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்ததுடன், ஆஜராக விலக்கு கேட்டு உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெறுங்கள் என அரசுக்கு அறிவுறுத்தினார்.
இதற்கிடையில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் தீரஜ்குமார் உயர்நீதி மன்ற விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நிலை உருவானது.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி வேல்முருகன், தமிழ்நாட்டில், நிலுவை குற்ற வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதுடன், உங்களை (தீரஜ்குமார்) நீதிமன்றத்தக்கு வரவழைப்பது நீதிமன்றத்தின் நோக்கமல்ல என்று தெரிவித்தவர், காவல்துறையில் என்ன நடக்கிறது, செயல்பாடுகள் எப்படி உள்து என்பது குறித்து, உங்களிடம் நேரில் தெரியப்படுத்தவே உத்தரவிடப்பட்டது என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.