டில்லி

தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

அ.தி.மு.க. ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராகப் பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம், கடந்த 2001-2006 ஆம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 77 லட்சம் அளவுக்குச் சொத்துகள் குவித்ததாக, 2006 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டது. கடந்த 2012 ஆம் வருடம்  இந்த வழக்கில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,இந்த உத்தரவை மறு ஆய்வு செய்வது தொடர்பாகத் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். தமக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கத் தடை கோரி முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது.  அப்போது இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த விவகாரத்தில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் விசாரணையைப் பாதிக்கக்கூடாது என்று தெளிவுபடுத்தினர்.

[youtube-feed feed=1]