டெல்லி: ஜாமீன் கிடைத்த மறுநாளே அமைச்சராக பதவியேற்றது ஏன் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதி அபே ஓகா மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளதுடன், இதுகுறித்து வரும் 18ந்தேதிக்குள் பதில் அளிக்க கெடு விதித்து உத்தரவிட்டு உள்ளார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி , உச்சநீதி மன்றத்தின் கருணையினால் ஜாமின் பெற்றார். இதையடுத்து அவர் வெளியே வந்த அடுத்த நாளே மீண்டும் மாநில அமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு மீண்டும், ஏற்கெனவே வகித்து வந்த மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையே வழங்கப்பட்டது. அவர் ஜாமீனில் வந்ததும் ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எதிர்த்து வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜாமினில் இருந்து வெளியே வந்த ஒருவருக்கு எப்படி அடுத்தநாளே அமைச்சர் பதவி வழங்க முடியும் என்றும், இவ்வாறு பதவி வழங்கினால் எப்படி நிதி கிடைக்கும், எதிர் மனுதாரர்கள் எப்படி அமைச்சரை எதிர்த்து பேசுவார்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், இதுகுறித்து பதில் அளிக்க செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் நீதிபதி அபே ஓகா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதை நிராகரித்த நீதிபதி ஒகே, கைதாகி ஜாமீனில் வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், பல வழக்குகள் நிலுவையில் உள்ள போது எவ்வாறு அமைச்சராக பொறுப்பேற்க முடியும் என மீண்டும் கேள்வி எழுப்பியதுடன், கடந்த முறை அவகாசம் வழங்கியும் ஏன் பதில் அளிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
இது குறித்து வரும் புதன்கிழமைக்குள் (டிசம்பர் 18ந்தேததி) செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு காரணம் உள்ளிட்டவற்றை கூற வேண்டும் என கெடு விதித்து வழக்கை ஒத்தி வைத்தார்.