டெல்லி: உச்சநீதி மன்றம் கண்டிப்பு எதிரொலியால்,  நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை மீண்டும் பள்ளிகள் மூட கெஜ்ரிவால் அரசு அறிவித்து உள்ளது. காற்று மாசு தொடர்பான வழக்கில், காற்று மாசைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டத்தைத் தயாரித்துக் கொண்டுவர மத்திய அரசுக்கும் டெல்லி மாநில அரசுக்கும் 24 மணி நேரக் கெடு விதித்து உத்தரவிட்டனர்.

டெல்லியில் காற்றுமாசு அதிகரித்துள்ளது. டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 382 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இதனால் மக்கள் சுவாசிக்கவே அவதிப்பட்டு வருகின்றனர்.  இது மக்களின் உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்  வாகனங்கள் செல்வதற்கும், கட்டுமான பணிகள் மற்றும் கட்டிடங்கள் இடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதுபோல அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் எனவும், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டது. பின்னர்  டிசம்பர் 1ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க டெல்லி மாநில அரசு உத்தரவிட்டு, நேற்று பள்ளிகள் வழக்கம்போல திறக்கப்பட்டது.

இந்த நிலையில் காற்று மாசு தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  காற்று மாசு குறையாமல் பள்ளிகளை ஏன் திறந்தீர்கள் என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், வேலைக்கு செல்பவர்கள் வீட்டிலேயே இருந்து பணியாற்றுமாறு தெரிவித்துவிட்டு, மாணவர்களை பள்ளிக்கு வருமாறு கட்டாயப்படுத்தியது ஏன் என உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.

டெல்லி காற்றுத் தர மேலாண்மைக்கான ஆணையம் நெருக்கடிச் சூழலில் அவசரமாகச் செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது.

அப்போது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காற்று மாசுபாடு குறித்து உயர் அதிகாரிகளுடன் பேசவும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் கூடுதல் நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யவும் கூடுதல் காலக்கெடு வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து,  தொழிற்சாலைப் புகை, வாகனப் புகையால் காற்று மாசுபடுவதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், களத்தில் இறங்காமல் ஒன்றும் செய்ய முடியாது என்றும், தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும்,  காற்று மாசைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டத்தைத் தயாரித்துக் கொண்டுவர மத்திய அரசுக்கும் டெல்லி மாநில அரசுக்கும் 24 மணி நேரக் கெடு விதித்தனர். இந்தக் காலக்கெடுவுக்குள் காற்று மாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் அது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் எனக் கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்குத் தள்ளி வைத்தனர்.

இதையடுத்து,  பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவித்த கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு, நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீண்டும் பள்ளிகள் மூடப்படும் என்று  அறிவித்துள்ளது.

இது தொடர்பாக,டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், ”டெல்லியில் தற்போது காற்று மாசு அதிகரித்து வருவதால், டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.