சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, தற்போதுள்ள பொறுப்பு நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய சஞ்சீவ் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம்  மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து  அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த  முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக குடியரசு தலைவர் அறிவித்தார். தற்போது, முனீஷ்வர்நாத் பண்டாரி பொறுப்பு தலைமை  நீதிபதியாக  இருந்து வருகிறார். இவரை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும், ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களை கே. ஸ்ரீநிவாச ரெட்டி, ஜி. ராமகிருஷ்ண பிரசாத், வெங்கடேஷ்வரலு நிம்மகடா, ராஜசேகர் ராவ், சட்டி சுப்பா ரெட்டி, ரவி சீமலப்பட்டி, மற்றும் வி. சுஜாதா ஆகிய ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கலாம் என்ற பரிந்துரையையும் கொலீஜியம் வழங்கியுள்ளது.

ஒரிஸா மாநில உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் வி. நாராசிங், சஞ்சய் குமார் மிஷ்ரா, பிராஜா பிரச்சன்னா சட்டபதி மற்றும் ராமன் முராஹாரி ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்கவும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.