டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் கொண்டுவந்துள்ள புதிய நடைமுறையால், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணை விறுவிறுவென நடை பெற்று வருகின்றன. மேலும், 3,147 வழக்குகள் தள்ளுபடி, 1200 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளது.

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக அதாவது, 49-வது தலைமை நீதிபதியாகஉதய் உமேஷ் லலித் ஆகஸ்டு 27ந்தேதி பதவி ஏற்றார். இவர் வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடுதல், வழக்குகள் விசாரணை, அரசியல்சாசன அமர்வு விசாரணை போன்றவற்றில் புதிய நடைமுறையை செயல்படுத்தி உள்ளார். ஒவ்வொரு அமர்விலும் உள்ள பொதுநல வழக்குகள் உட்பட 60-க்கும் மேற்பட்ட இதர வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறையை அறிமுகம் செய்தார்.
அதுபோல, உச்சநீதிமன்றத்தில் தலா 5 நீதிபதிகள் கொண்ட இரண்டு அரசியல் சாசன அமர்வுகளை அமைத்து உத்தரவிட்டார். முதல் பெஞ்ச்சில் இந்திய தலைமை நீதிபதி யு.யு.லலித் இடம்பெற்றுள்ளார். அவருடன் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ் ரவீந்திர பட், பேலா எம் திரிவேதி, ஜேபி பார்திவாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இரண்டாவது அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஹேமந்த் குப்தா, சூர்யா காந்த், எம்எம் சுந்திரேஷ் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் உள்ளனர். அரசியல் சாசன அமர்வு ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன், மற்றும் வியாழன் கிழமைகளில் 2.5 மணிநேரம் வழக்குகளை விசாரிக்கும் என தலைமை நீதிபதி யுயு லலிதா கூறியுள்ளார். மேலும் மாலை நேரங்களிலும் வழக்குகள் விசாரிக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. முதல் இரண்டு நாளிலேயே 1,293 வழக்குகள் முடித்துவக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது, 2014-ம் ஆண்டுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிலுவையில் உள்ள 13,147 வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்குகளில், கூடுதல் மனுக்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்கியும் தாக்கல் செய்யாததால் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல கடந்த 13 நாட்களில் 3,500-க்கும் மேற்பட்ட இதர வழக்குகளும், 250-க்கும் மேற்பட்ட வழக்கமான வழக்குகளும், மாற்றுதலாகி வந்த 1,200க்கும் மேற்பட்ட வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
தலைமை நீதிபதி யு.யு.லலித்தின் அதிரடி நடவடிக்கை, வேலைப்பளு காரணமாக, சக நீதிபதிகள் அவர்மீது அதிருப்தி கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ‘‘புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை பட்டியல் நடைமுறை, இந்த வழக்கில் போதிய நேரத்தை அளிக்கவில்லை. மாலை நேரத்திலும், விசாரணைக்கு ஏராளமான வழக்குகள் உள்ளன. அதனால் இந்த வழக்கு, நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’’ என கூறி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.