டில்லி,

ந்திய கிரிக்கெட் சங்கமான, பிசிசிஐ கூட்டங்களில் பங்கேற்கக்கூடாது என்று முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசனுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது.

ஊழல் முறைகேடு காரணமாக பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் இருந்து  சீனிவாசன் உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

பிசிசிஐயில் லோதா குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து 4-ஆவது இடைக்கால அறிக்கையை பிசிசிஐ நிர்வாகக் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

அதில் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வர்களான என். சீனிவாசன், நிரஞ்சன் ஷா ஆகியோர் தங்களின் தனிப்பட்ட ஆதாயத்துக்காக பிசிசிஐயில் லோதா குழுவின் பரிந்துரையை அமல்படுத்தவிடாமல் தடையாக இருக்கிறார்கள் என குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பாக என். சீனிவாசன், நிரஞ்சன் ஷா ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம் என்றும், பிசிசிஐ நிர்வாகக் குழுவின் 4-ஆவது இடைக்கால அறிக்கை மீதான விசாரணை வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது என்.சீனிவாசன், நிரஞ்சன் ஷா ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என கூறி இருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  உச்ச நீதிமன்றம்,  என். சீனிவாசன், நிரஞ்சன் ஷா ஆகியோர் பிசிசிஐ கூட்டங்களில் பங்கேறகக் கூடாது என தடை விதித்துள்ளது.

மேலும், உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மாநில கிரிக்கெட் சங்கங்களின் பிரதிநிதிகளாக பிசிசிஐ கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும் எனவும் கேள்வி எழுப்பி உள்ளது.

இதன் காரணமாக சீனிவாசனுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.