டெல்லி: செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு விசாரணையின்போத, அவர் தற்போதைய நிலையே தொடர விரும்புகிறார் என அவரது வழக்கறிஞர் கூறிய நிலையில், தங்களது கேள்விக்கு முறையான பதில் இல்லை என கோபப்பட்ட நீதிபதிகள், அவரது முடிவு குறித்து 10 நாட்களில் செந்தில் பாலாஜி பதிலளிக்க வேண்டும், இதற்கு மேல் அவகாசம் வழங்கமுடியாது என கூறி உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனுக்கு 10 நாட்களுக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வழக்கின் விசாரணைக்கு அவகாசம் கேட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து கடுமையாக விமர்சித்துள்ளது.
`அமைச்சராகவே தொடர்வேன்’ என உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் திட்டவட்டமாக கூறிய நிலையில், அவரது ஜாமின் ரத்து வழக்கை மேலும் வழக்கை ஒத்திவைக்க மறுத்த உச்ச நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏராளமான நபர்களிடம் லஞ்சம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறையினர் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த செந்தில்பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்ததால், செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தை நாடி இருந்தார். பின்னர் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஜாமின் பெற்ற அடுத்த நாளே அவர் தமிழ்நாடு அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவில், `அதிகாரம் மிக்க அமைச்சர் பொறுப்பை மீண்டும் செந்தில் பாலாஜி ஏற்றுக் கொண்டிருப்பதால், நடைபெற்று வரும் அவருக்கு எதிரான வழக்கின் விசாரணையில் தாக்கம் ஏற்படலாம். அது வழக்கின் விசாரணையையும் பாதிக்கலாம். எனவே அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என கோரிக்கை வைத்திருந்தார்.
அமலாக்கத்துறை சார்பிலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நேற்று (மார்ச் 24ந்தேதி) மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள்இ இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்க வழங்கப்பட்ட அறிவுறுத்தல் என்ன ஆனது? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், இந்த விவகாரத்தை பொறுத்தவரை அமைச்சராக பதவி ஏற்கக்கூடாது என குறிப்பிட்ட உத்தரவு இல்லை என தெரிவித்தார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் எந்தவித advantage எடுக்கக்கூடாது என தெரிவித்திருந்தோம், அது என்ன? கேட்டனர். இதற்கும், செ.பா வழக்கறிஞர், இதுதொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்கிறோம். அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது. நீங்கள் கூறியதை பதிவு செய்கிறோம். இந்த விவகாரத்தில் அமைச்சராக தொடர விரும்புகிறாரா என்பதை கேட்டு தெரிவிக்க கூறி இருந்தோம்? ஆனால் அதனை செந்தில் பாலஜி தரப்பு முறையாக பின்பற்றவில்லை. அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
இந்த வழக்கில், மேலும் கடந்த முறை நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்கவில்லை என்பதால், நீங்கள் advantage எடுத்துக்கொள்வீர்களா?. இது சரியான நடைமுறை அல்ல, இவ்வாறு தொடர்ச்சியாக காலந்தாழ்த்துவது ஒருவரின் நிலைப்பாட்டையே காட்டுகிறது. எனவே இந்த விவகாரத்தில் கால அவகாசம் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “தற்போது செந்தில் பாலாஜி என்ன நிலையில் இருக்கிறாரோ, அதே நிலையில் அவர் தொடர விரும்புகிறார்” என தெரிவித்தார். . அதாவது அமைச்சராக விரும்புகிறார் என்பதை தான் அவ்வாறு வழக்கறிஞர் சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தவில்லை, எனது தரப்புக்கு இரண்டு நாள் அவகாசம் வழங்கினால் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறேன். எனவே அவகாசம் வழங்க வேண்டும்
நீதிபதிகள்:- உச்ச நீதிமன்றத்தை நாடி ஜாமின் பெற்றவுடனேயே செந்தில் பாலாஜி தமிழக அமைச்சரானதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இதுவரையில் செந்தில் பாலாஜி உரிய பதிலை அளிக்கவில்லை. எனவே அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். தொடர்ந்து இதுபோன்று பதில் அளிக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல” என தெரிவித்தனர்.
`அப்படி என்றால், வழக்கின் மீது உங்களது வாதங்களை முன் வையுங்கள்’ என நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். அதற்கு, `வாதங்களை முன் வைப்பது தொடர்பாக தங்கள் தரப்புக்கு நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.
அதைக் கேட்டு கோபமடைந்த நீதிபதிகள், `சம்பந்தப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கின் விசாரணைக்காக செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகி வருகிறார். அப்படி இருக்கும்போது இவ்வாறு அவர் கேட்பது மிகவும் துரதிஷ்டவசமானது. மேலும் நியாயமற்றதும் கூட.. இந்த வழக்கை விசாரிப்பதற்காகத்தான் சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டிருக்கின்றது. அப்படி இருக்கும்போது, அதை புரிந்து கொள்ளாமல் வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க கேட்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது” என கடும் கோபமாக கூறினார்கள்.
இதனையடுத்து பேசிய மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, `தனது செயல்பாட்டிற்காக மன்னிப்பு கேட்பதாகவும், தனது வாதங்களை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும்’ எனவும் கேட்டுக்கொண்டார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், `செந்தில் பாலாஜி தரப்புக்கு தாங்கள் தெரிவித்த தங்களது கருத்துக்களும் நிச்சயம் பதிவு செய்யப்பட வேண்டும்’ என கூறியதோடு வழக்கின் விசாரணை ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர்.
வரும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கேட்டபோது, `நீங்கள் சொல்லும் தேதியில் எல்லாம் ஒத்தி வைக்க முடியாது’ எனக்கூறி வழக்கின் விசாரணையை ஏப்ரல் 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி பதிலளிக்க உத்தரவிட்டு, மேற்கொண்டு கால அவகாசம் வழங்கப்படாது எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர், தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த சாராய அமைச்சர், சிறையில் ஜாமீன் கிடைப்பதற்காக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து நாடகமாடி, ஜாமீனில் வெளிவந்ததும், உடனடியாக அமைச்சர் பதவியேற்றதை, உச்ச நீதிமன்றம் கண்டித்ததோடு, அதற்கு விளக்கம் கொடுக்குமாறும் சாராய அமைச்சருக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தும், சாராய அமைச்சர் இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருப்பதை, இன்று உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இதே சாராய அமைச்சர் மீது கூறிய குற்றச்சாட்டுக்களை வசதியாக மறந்து, வெட்கமே இல்லாமல் இன்று தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார். ஜாமீன் கிடைப்பதற்காகப் பொய் சொல்லி, உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றியுள்ள சாராய அமைச்சர், அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. உடனடியாக, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.