டில்லி:

என்எக்ஸ் மீடியா  வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுன் உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், அவர்  தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். அதேவேளையில் அமலாக்கத்துறையும் அவரை கைது செய்ய முயற்சி மேற்கொண்டது. ஆனால், கார்த்தி சிதம்பரம் அதற்கும் முன்ஜாமின் பெற்றுள்ளார்.  ஜூலை பத்தாம் தேதிவரை அவரை கைது செய்ய சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், சொந்த அலுவல் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரித்தது.

அதைத்தொடர்ந்து, கார்த்திக் சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்று,  மே மாதம் 19-ம் தேதி முதல் 27-ம் தேதிவரை பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு கார்த்தி சிதம்பரம் செல்ல ஒருசில  நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உள்ளது.

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லும் விவரம், மற்றும் பயணம் செய்யும் விமானம், இந்தியாவுக்கு திரும்பும் தேதி ஆகியவற்றை விசாரணை முகமையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும்,  வெளிநாடுகளில் புதிய வங்கி கணக்குகளை தொடங்கவோ,  முடிக்கவோ கூடாது.

மேலும், வெளிநாடுகளில் சொத்து தொடர்பான எவ்வித பரிவர்த்தனைகளிலும் ஈடுபட கூடாது என்றும்,  பயணம் முடிந்து தாய்நாடு திரும்பியதும் பாஸ்போர்ட்டை அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்துவிட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் அவருக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.