பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு முதல் பிரதியை பெற்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலினின் ஆளுமை தான் காரணம் என்று கூறினார்.
திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொடர் வெற்றிகளை தனது உழைப்பின் மூலம் பெற்றுள்ளார்.
பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்களை வழி நடத்துவதில் எந்த பிரச்சனையும் இருக்காது ஆனால் பழைய மாணவர்களை வழிநடத்துவது மிகவும் சிரமம் என்று ரஜினி குறிப்பிட்டார்.
திமுக-வில் நிறைய பழைய மாணவர்கள் உள்ளனர் அவர்கள் அனைவரும் அசாத்தியமானவர்கள்.
ரேங்க் எடுத்த பின்னும் அடுத்த வகுப்பிற்கு போகாமல் உட்கார்ந்து இருப்பவர்கள்.
அப்படி கலைஞர் கருணாநிதி கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டிய அசாத்தியமானவர் தான் துரைமுருகன் என்று பேசினார்.
துரைமுருகன் குறித்த ரஜினியின் இந்த பேச்சால் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ரஜினிகாந்தின் இந்த பேச்சை ரசித்து குலுங்கிக் குலுங்கி சிரித்தார்.
இதனைத் தொடர்ந்து கருணாநிதியின் நினைவிடம் தாஜ்மஹாலைப் போன்று அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய ரஜினிகாந்த் சமூகத்திற்காக பாடுபட்ட கருணாநிதி குறித்த புத்தகம் எழுதிய எ.வ. வேலுவை பாராட்டினார்.