டெல்லி:
அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்ய மாட்டோம் என்றும், முஸ்லிம் சட்டவாரிய முடிவில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும் சன்னி வக்பு வாரியம் தெரிவித்து உள்ளது.
சுமார் 500ஆண்டு காலமாக நீடித்து வந்த அயோத்தி ராமஜென்ம பூமி நிலம் விவகாரம் தொடர்பாக, கடந்த 9ந்தேதி (09-11-2019) அன்று உச்சநீதி மன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தமானது என்றும், அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை குறித்து ஆலோசனை நடத்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் போவதாக அறிவித்தது. முஸ்லிம் சட்ட வாரியம் முடிவுக்கு ஜமாத்-எ- உலமா என்ற அமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவுக்கு உ.பி. மத்திய சன்னி வக்போர்டு, ஷியா வக்போர்டு ஆகியவை தங்களுக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்து உள்ளது. அதுபோல, இந்த நிலம் தொடர்பாக முதன்முலாக வழக்கு தொடர்ந்த முதல் மனுதாரரின் வாரிசான இக்பால் அன்சாரியும் உச்சநீதி மன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்து உள்ளன.
ஆனால், முஸ்லிம் சட்ட வாரியம் உடன், மனுதாரர்களான முகமது உமர், மிஸ்பகுதீன், மவுலானா மஹபூப் ரஹ்மான், ஹாஜி மஹபூப், ஹாஜி ஆசாத், ஹபீஸ் ரிஸ்வான், மவுலானா ஹிஸ்புல்லா ஆகிய 7 பேர் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.