மேற்கு இந்திய தீவு கிரிக்கெட் வீரர்களிடையே நடைபெற்று வரும் கரீபியன் ப்ரீமியர் லீக் (CPL) கிரிக்கெட் போட்டியில் ட்ரின்பேகோ நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக அந்த அணியைச் சேர்ந்த சுனில் நரேனுக்கு ‘ரெட் கார்ட்’ காட்டப்பட்டதை அடுத்து மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள் போட்டிகள் என்று ரசிகர்களை கவர்ந்து வந்த கிரிக்கெட் போட்டி காலத்துக்கு ஏற்ற வகையில் டி20 என்ற 20 ஓவர் போட்டிகளாக மாறியுள்ளது.

20 ஓவர் போட்டிகளின் நேரத்தை குறைப்பது குறித்து வெவ்வேறு உத்திகளை பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் சங்கங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசிமுடிக்காத அணிக்கு அபராதம் விதிக்கும் முறையை சர்வதேச கிரிக்கெட் சங்கம் (ICC) அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் குறித்த நேரத்தில் பந்து வீசாத அணி 30 மீட்டர் வட்டத்துக்குள் 5 பீல்டர்களை வைக்கவேண்டும் என்று புதிதாக விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

மேற்கு இந்திய தீவு அணியைச் சேர்ந்த பந்துவீச்சாளர்கள் பந்து வீசும் போது எதிராணியினருக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தி வந்தனர். இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் சர்வதேச அளவில் கொண்டுவரப்பட்டதை அடுத்தே எதிரணி வீரர்களின் தலை தப்பியது என்றால் மிகையாகாது.

காயம், மூன்றாவது அம்பயர் முடிவு மற்றும் பேட்டிங் செய்யும் அணியால் ஏற்படும் தாமதம் தவிர பந்துவீசும் அணியால் போட்டி தாமதம் ஏற்படுவதை தவிர்க்க சி.பி.எல். எனும் கரீபியன் ப்ரிமியர் லீக் போட்டிகளில் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

17வது ஓவரை 72 நிமிடம் 15 வினாடிகளில் வீசவில்லை என்றால் அடுத்த ஓவரில் 30 மீட்டருக்கு உள்ளே 5 பில்டர்கள் இருக்க வேண்டும்.

18வது ஓவரை 76 நிமிடம் 30 வினாடிகளில் வீசவில்லை என்றால் அடுத்த ஓவரில் 30 மீட்டருக்கு உள்ளே 6 பில்டர்கள் இருக்க வேண்டும்.

அடுத்ததாக 19வது ஓவரை 80 நிமிடம் 45 வினாடிகளில் வீசவில்லை என்றால் 20வது ஓவரில் பந்து வீசும் அணியில் இருந்து ஒரு வீரர் வெளியேற்றப்படுவார்.

வெளியேற்ற விரும்பும் வீரர் அந்த அணியின் கேப்டன் தேர்வு செய்துகொள்ளலாம். 20வது ஓவரில் 10 வீரர்களுடன் மட்டுமே விளையாடும் அணி பந்துவீச்சாளர் மற்றும் விக்கெட் கீப்பர் நீங்கலாக 6 பேரை 30 மீட்டர் வளையத்துக்குள் நிறுத்த வேண்டும் இதனால் இரண்டு பீல்டர்கள் மட்டுமே வெளியில் நிற்க முடியும் என்ற புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பந்துவீச்சு நேரம் காரணமாக சி.பி.எல். போட்டிகளில் இருந்து முதல் முறையாக சுனில் நரேன் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றில் ரெட் கார்ட் மூலம் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்ட வீரர் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் சுனில் நரேன்.