லாஸ்ஏஞ்சலிஸ்: கூகுள் மற்றும் ஆல்ஃபபெட் நிறுவனங்களின் சிஇஓ பொறுப்பில் இருக்கும் சுந்தர் பிச்சைக்கு, 2020ம் ஆண்டில் ஊதியமாக இந்திய மதிப்பில் ரூ.14.5 கோடி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது அவருக்கான ஆண்டு சம்பளமாகும். இந்தப் புதிய ஊதிய உயர்வு அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருமென ஆல்ஃபபெட் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், அந்நிறுவனங்களின் பங்குகளிலிருந்தும் ரூ.1700 கோடி அளவிலான மதிப்புள்ள பங்குகள் வழங்கப்படவுள்ளன.
இதில் ஆல்ஃபபெட் நிறுவனத்தின் பங்கு மட்டும் 90 மில்லியன் டாலர்களாகும். இதுமட்டுமின்றி, சுந்தர் பிச்சையின் செயல்பாடுகளுக்காக 120 மில்லியன் டாலர்களும், அவர் தனது பணியில் தொடர்வதற்காக 30 மில்லியன் டாலர்களும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2004ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தில் இணைந்து, அதன் மேம்பாட்டிற்கு முக்கியப் பங்காற்றினார். கூகுள் குரோம் மற்றும் கூகுள் டூல்பார் ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.
இதன்மூலம் உலகளவில் முக்கிய பிரவுசராக கூகுள் வடிவம் பெற்றது. இவரின் இத்தகையப் பங்களிப்பால் கடந்த 2015ம் ஆண்டு கூகுள் நிறுவன சிஇஓ பதவி இவரைத் தேடி வந்தது.