சென்னை: கோடை விடுமுறையொட்டி, தமிழ்நாட்டில்  19 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், இதன்மூலம்  239 முறை ரயில் சேவைகள் நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதுபோல, ரயில்வேயும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதன்படி, தற்போதைய கோட்டை விடுமுறையையொட்டி, சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா இடங்களுக்கு பொதுமக்கள் செல்லும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது.

அதன்படி,  கோடை விடுமுறையையொட்டி, 19 சிறப்பு ரயில்கள் மூலம் 239 நடைகள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து  தெற்குரயில்வே வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், கோடை விடுமுறையையொட்டி, ஏப்ரல், மே மாதங்களில் பொதுமக்கள் அதிகளவில் வெளியூா் பயணம் மற்றும் சுற்றுலா செல்வது வழக்கம். இந்நிலையில், பயணிகளின் தேவைகளை பூா்த்தி செய்ய ஏதுவாக, இந்திய ரயில்வே சாா்பில் நாடுமுழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், மொத்தம் 9,111 நடைகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதில் குறிப்பாக தெற்கு ரயில்வே சாா்பில், தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ராஜஸ்தான், தில்லி, மேற்கு வங்கம் , குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை சென்ட்ரலிலிருந்து கொச்சிவேலி மற்றும் ராஜஸ்தான் மாநிலம் பாா்மோ், சென்னை எழும்பூா் – திருநெல்வேலி, தாம்பரம் – மங்களூரு, ஈரோடு – குஜராத் மாநிலம் உத்னா, கோவை – பிகாா் மாநிலம் பரோனி உள்பட மொத்தம் 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான, கால அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு அடுத்தடுத்து வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல,  மத்தியப் பிரதேச மாநில ஜபல்பூரில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்க மேற்கு மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஜபல்பூரில் இருந்து ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் வரும் அனைத்து வியாழக்கிழமை தோறும் மாலை 4.25 மணிக்கு புறப்படுறது. சனிக்கிழமை அதிகாலை 12.15க்கு மதுரை வந்தடைகிறது. மறு மார்க்கமாக மதுரையில் இருந்து சனிக்கிழமை தோறும் இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை ஜபல்பூர் சென்றடைகிறது.