சென்னை:
கொரோனா விடுமுறை காரணமாக, நீதிமன்றப் பணிகளும் முடங்கி உள்ள நிலையில், உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் கோடைக்கால விடுமுறை ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது.
ஒவ்வொரு ஆண்டு பள்ளி இறுதித்தேர்வு முடிவடைந்ததும், ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். அதுபோல, நீதிமன்றங்களுக்கும் கோடை விடுமுறை விடப்படும்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நீதிமன்றங்களின் பணிகளும் முடஙகப்பட்டு உள்ளது.
அத்தியாயவசிய வழக்குகள் மட்டுமே, உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றங்களில் காணொளி காட்சி மூலம் நடைபெற்று வருகிறது.
தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வரும் நிலையில், 20ந்தேதிக்கு பிறகு சில தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்பட உள்ளது. அப்போது நீதிமன்ற பணிகளுக்கும் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றம், உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை, தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் கோடை விடுமுறையும் ரத்து செய்யப்படுவதாக வும், மே 2 முதல் 31 ம் தேதி வரை வழக்கம் போல் நீதிமன்றம் செயல்படும் என்றும், சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.