சுகந்த குந்தளாம்பிகை சமேத திருவாப்புடையார் திருக்கோவில், மதுரை மாவட்டம், செல்லூரில் அமைந்துள்ளது.
சோழாந்தகன் என்ற மன்னன் ஒரு சிவபக்தன். இவனது ஆட்சியில் காலம் தவறாமல் மழை பொழிந்து, விளைச்சல் பெருகி மக்கள் இன்பமாக வாழ்ந்தனர். இதற்கு காரணம் இவனது சிறந்த சிவபக்தி தான். இவன் எப்போதும் சிவபூஜை செய்த பின்பு தான் சாப்பிடுவான். ஒரு முறை இவன் வேட்டையாடக் காட்டிற்கு சென்றான். அப்போது ஒர் அழகிய மானைப்பார்த்தான். விரட்டினான். ஆனால் இவனது பிடியில் சிக்கவில்லை. மானை விரட்டிய களைப்பால் மயங்கிய மன்னன் நடுக்காட்டில் விழுந்து விட்டான். பயந்து போன இவனது பாதுகாப்பு வீரர்கள், மன்னனின் களைப்பு தீர உணவை அருந்தக் கூறினர். ஆனால் சிவபூஜை செய்யாமல் சாப்பிடமாட்டேன் என்பதை உறுதியாகத் தெரிவித்தான். புத்திசாலி அமைச்சர் ஒருத்தர், அந்த காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து தரையில் ஆப்பு அடித்தார். அதைக்காட்டி, “மன்னா, இங்கே ஒரு சுயம்பு இலிங்கம் உள்ளது. நீங்கள் அதை பூஜை செய்த பின் உணவருந்தலாமே” என்று யோசனை கூறினார். களைப்பிலிருந்த மன்னனும் அந்த ஆப்பை சுயம்புலிங்கம் என நினைத்து வணங்கி உணவருந்தி விட்டான். களைப்பு நீங்கிய பிறகுதான், தாம் வணங்கியது இலிங்கம் அல்ல – அது ஒர் ஆப்பு என்பதை உணர்ந்து மிக வருந்தினான்.
“இறைவா! நான் இது நாள் வரை உன்னை பூஜித்தது உண்மையானால், நீ இந்த ஆப்பில் வந்து என்னை அருள்பாலிக்க வேண்டும்” என மன்றாடினான். மன்னனின் பக்திக்கு மகிழ்ந்த இறைவன் அந்த ஆப்பிலே தோன்றி அருள் பாலித்தார். சிவன் “ஆப்பு உடையார்” ஆனார். அந்த ஊர் “ஆப்பனூர்” ஆனது.
இந்த சோழாந்தகனின் வழி வந்த சுகுணபாண்டியனின் ஆட்சியில் பஞ்சம் நிலவியது. ஆனாலும் அங்கிருந்த சிவாலயத்தின் அர்ச்சகர் சிவனுக்காக சிறிது பயிர்செய்து நைவேத்யம் செய்து வந்தார். “நாடே பஞ்சமாக இருக்கும் போது இறைவனுக்கு நைவேத்யமா?” எனக் கோபப்பட்ட மக்கள் அர்ச்சகரைத் துன்புறுத்தினர். வருந்திய அர்ச்சகர் சிவனிடம் முறையிட்டார். அதற்கு சிவன், “நீ உன் மனைவியுடன் என்னைப் பின் தொடர்ந்து வா. நாம் வேறிடம் செல்வோம்” என்று ரிஷபத்துடன் கிளம்பினார். ரிஷபம் வந்து நின்ற இடமே ரிஷப (இடப ) புரமானது. அதுவே ஆப்பனூர் ஆனது என்றும் கூறுவர். பஞ்சத்தின் காரணமாக அர்ச்சகர் வைகை ஆற்று மணலை வைத்து சமைக்க எண்ணினார். அப்போது இறைவனின் அருளால் அந்த ஆற்று மணல் அன்னமாக மாறியது. இதனால் இத்தல இறைவனுக்கு “அன்னவிநோதன்” என்ற பெயர் ஏற்பட்டது. கோயில் மூலவராக ஆப்பனூர் நாதரும், சுகந்த குந்தளாம்பிகையும் அருள் பாலிக்கிறார்கள்.
இலிங்கம் சிறியது தான். ஆனாலும் இவரது பெருமையோ மிகவும் சிறப்பானது. மலைகளில் மேருவைப்போலவும், பசுக்களுள் காமதேனுவைப் போலவும், விண்மீன்களுக்கிடையே சந்திரனைப்போலவும், பிரகாசமுள்ள பொருள்களுள் சூரியனைப்போலவும், கொடையாளிகளுள் மேகத்தைப்போலவும், புருஷர்களுள் விஷ்ணுவைப் போலவும் இம்மாதிரி எது எது அதிகமோ, அதேபோல் இங்குள்ள ஆப்புடையார் மற்ற சுயம்பு இலிங்கங்களுள் விசேஷமானவர். இவரை வணங்கினாலே மற்ற மூர்த்திகளை அர்ச்சித்த பலன் கிடைக்கும் என புராணம் கூறுகிறது. மதுரையிலுள்ள பஞ்ச பூத ஸ்தலங்களில் அப்பு (நீர்) தலமாகும்.
பிரம்ம தேவனின் வழியில் வந்த புண்ணிய சேனன் என்பவன் ஒரு சிவபக்தன். இவன் செல்வத்திற்கே அதிபதியாவதற்காக அகத்தியரின் ஆலோசனைப்படி, இத்தலத்திற்கு வந்து கடும் தவம் இருந்தான். தவத்தினால் மகிழ்ந்த ஆப்புடையார், சுகந்த குந்தளாம்பிகையுடன் தோன்றி, புண்ணிய சேனனின் விருப்பத்தை நிறைவேற்றினார். இதனால் அகங்காரம் பிடித்து, சிவனின் அருகில் இருந்த அம்பிகையின் அழகில் மயங்கினான். இதனால் இவனுக்கு கண்ணும் போனது; உயிரும் போனது. இறைவனின் கருணையால் மீண்டும் உயிர்பெற்றான். தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டான். மன்னித்த ஆப்புடையார், இவனை “குபேரன்” என்று அழைத்து மீண்டும் வாழ்வு தந்தார். அன்று முதல் சங்கநிதி, பதுமநிதி என்ற இரு செல்வங்களோடு வடக்கு திசையை காத்து வந்தான். ஆப்புடையாரும், சுகந்த குந்தளாம்பிகையும் தனித்தனி சன்னதியில் இருந்து அருள்பாலிக்கின்றனர். அனுக்ஞை விநாயகர், முருகன், நடராஜர், காசிவிஸ்வநாதர், மீனாட்சி மற்றும் நவகிரகங்களையும் இங்கு தரிசிக்கலாம்.
ஆனி உத்திரம், ஆடிப்பூரம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி அன்ன அபிஷேகம், கார்த்திகை சோமவாரம், மார்கழி திருவாதிரை என மாதந்தோறும் திருவிழா தான். மாசி மகத்தன்று பிரம்மமோத்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முருகனிடமும், செல்வ வளம் பெருக வெள்ளிக்கிழமையன்று சிவனுக்கு அர்ச்சனை செய்து, பிரார்த்தனை செய்கின்றனர்.
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்தும், சிறப்பு பூசைகள் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.