“நீல திமிங்கலம்” என்னும் இணைய தற்கொலை விளையாட்டு இந்தியாவில் பரவி வருவது அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்த விளையாட்டில் முகம் தெரியாத நபர் யாரோ கொடுக்கும் டாஸ்க்குகளை (Task) பங்கேற்பாளர்கள் தினமும் செய்ய வேண்டும். நள்ளிரவில் பேய் படம் பார்ப்பது, தன்னுடைய கையை தானே பிளேடுகளால் கிழித்துக்கொள்வது, மொட்டமாடி சுவர் மீது ஏறி நின்று பாடல் கேட்பது என்று ஐம்பது நாட்களுக்கு வெவ்வேறு விபரீத விளையாட்டுகள் இதில் உண்டு.
இதில் கல்துகொள்பவர்கள் நாள்தோறும் தங்கள் விபரீத விளையாட்டை செல்பி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்பது விதி. ஒவ்வொரு விபரீத டாஸ்கையும் முடித்த பிறகே அடுத்த டாஸ்க் கொடுக்கப்படும்.
இந்த விபரீத விளையாட்டின் கடைசி கட்டமான ஐம்பதாவது தினம், பங்கேற்பாளர்கள் தற்கொலை செய்துகொள்ளும்படி டாஸ்க் அளிக்கப்படும்.
இந்த விபரீத விளையாட்டில் பங்கேற்ற மும்பையை சேர்ந்த சிறுவன் ஒருவன், போட்டியின் ஐம்பதாவது நாளில் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபரீத விளையாட்டால் இந்தியாவில் ஏற்படும் முதல் உயிரிழப்பு இதுவாகும்.
மும்பை அந்தேரி பகுதியில் அந்த சிறுவனின் குடும்பம் வசிக்கிறது.
தற்கொலை செய்துகொண்ட அந்த சிறுவனின் நடவடிக்கையில் கடந்த சில நாட்களாகவே பல மாறுதல்கள் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள்.
ஆனாலும் சிறுவன் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு செல்வான் என்று குடும்பத்தினர் நினைக்கவில்லை.
சம்பவம் நடந்ததிற்கு முந்தைய நாளில் பள்ளியை வீட்டு வீட்டுக்கு கிளம்பிய சிறுவன், தான் மறுநாள் பள்ளிக்கு வரப்போவதில்லை என தெரிவித்ததாக சக மாணவர்கள் கூறினர்.
இப்போட்டியில் விளையாடி இதுவரை உலகம் முழுவதும் இருநூறுக்கும் கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆன்லைன் விளையாட்டை ரஷ்யாவை சேர்ந்த பிலிப் புடாகின் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு உருவாக்கினார். சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டும் விளையாட்டை கண்டுபிடித்ததற்காக அவரை ரஷ்ய காவல்துறையினர் சென்ற வருடம் கைது செய்தனர். ஆனாலும் இந்த விபரீத இணைய விளையாட்டை முகம் தெரியாத சில நபர்கள் தொடர்ந்து நடத்திவருகிறார்கள்.
இதுபோன்ற விபரீத விளையாட்டில் சிறுவர்கள் ஈடுபடாமல் இருக்க பெற்றோர், விழிப்புடன் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என்று மனோதத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
சிறுவர்கள் தங்களின் கை கால்களில் பிளேடுகளால் கிழித்துக்கொண்டிருந்தால் உடனே அவர்களை மனநல மருத்துவர்களின் அழைத்துச் சென்று ஆலோசனை பெற வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்கள்.
முக்கியமாக பள்ளி சிறுவர்களுக்கும் மொபைல் போன்கள் வாங்கித்தருவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.
பெற்றோர்களே.. உஷார்!