காபூல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே இன்று தற்கொலைக் குண்டு தாக்குதல் நடந்துள்ளது.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதையொட்டி அங்குள்ள மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதையொட்டி காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டமாகக் காத்திருக்கின்றனர். காபூல் விமான நிலையத்துக்கு உள்ளே ஆப்கான் மற்றும் அமெரிக்கப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று விமான நிலைய வளாகம் அல்லது வெளிப்புறத்தில் தாக்குதல் நடத்தலாம் என மேலை நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அதற்கேற்ப காபூல் விமான நிலையத்துக்கு வெளியே பயங்கர வெடிகுண்டு சத்தம் கேட்டதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சப்தம் தற்கொலைக் குண்டு தாக்குதல் சத்தம் என பிபிசி நிறுவன செய்தியாளர் சிக்கந்தர் கெர்மானி தெரிவித்துள்ளார். காபூல் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த நபர் தற்கொலைக் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து அதிகாரபூர்வ விவரம் தெரியவில்லை. விபத்தில் 10 பேர் பலி என ஆதாரமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.