சாவர்க்கர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக தான் கூறியது தவறு என்று சுதா கொங்கரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா அந்தப் படத்தை இந்தியில் ரீ-மேக் செய்து வெளியிட்டுள்ளார்.
இந்த படம் வரவேற்பை பெற்றதை அடுத்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் சுதா கொங்கரா பேட்டி அளித்திருந்தார்.
அதில், “சாவர்க்கர் மிகப் பெரிய தலைவராக இருந்த போது, அவர் தன்னுடைய மனைவியை நீ படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தார்.
ஆனால் அவரது மனைவிக்கு வீட்டில் உள்ள வேலைகளை கவனித்துக் கொண்டு இல்லத்தரசியாக வாழ்க்கை கழிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது.
அந்த நேரத்தில் பெண்கள் யாரும் படிக்க மாட்டார்கள். அவர் படிக்கச் செல்லும் போது, தெருவில் பலர் அவரை அவமானப்படுத்துவார்கள். இதனையடுத்து, அவர் நான் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று சொல்லி, வீட்டிற்கு வந்து விடுவார்.
இதை கவனித்த சாவார்க்கர், நான் உன்னை அழைத்துச் செல்கிறேன். யார் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என்று, மறுபடியும் அவரது கையைப் பிடித்து பள்ளிக்கு அழைத்துச் செல்வார்” என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
இது சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் அவரது கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதோடு பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து தனது மனைவியை பள்ளிக்கு அழைத்துச் சென்றது சாவர்க்கர் இல்லை அது ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரி பாய் புலே என்று விமர்சிக்கப்பட்டது.
https://x.com/Sudha_Kongara/status/1817067879973736913
இதனையடுத்து தனது தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ள சுதா கொங்கரா “என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன்.
ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன்.
மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி.
ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.