வாஷிங்டன்:
அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர் கிளப்பில் புகுந்து 49 பேரை சுட்டுக்கொன்ற கொலையாளி உமரும் ஓரின சேர்க்கையாளர்தான் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் ஒர்லான்டோ நைட் கிளப்பில் தாக்குதல் நடத்திய உமர் மதீன் தந்தை சித்திக், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தனது மகன் உமருக்கு ஓரின சேர்க்கையாளர்களை கண்டாலே பிடிக்காது, எனவே கொலை செய்திருக்க கூடும் என்று கூறியிருந்தார். இன்னொருபுறம், உமர் ஒரு மனநோயாளி என்றும், மதவெறியன் என்றும் இருவேறுவிதமான கருத்துக்களும் வெளியாகின.
இந்த நிலையில், உமரின் முன்னாள் மனைவியும், வகுப்பு தோழரும் கூறியுள்ள தகவல்கள் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2006ம் ஆண்டில், அமெரிக்காவிலுள்ள, இந்தியன் ரிவர் கம்யூனிட்டி கல்லூரியில் ஒன்றாக படித்தபோது தன்னுடன் ஓரினச் சேர்க்கை செய்ய உமர் விருப்பம் தெரிவித்ததாக பெயர் தெரிவிக்க விரும்பாத, வகுப்பு தோழர், அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்.
உமரின் முன்னாள் மனைவி சிதோரா யுசுபியின் தற்போதைய காதலன், டிவி பேட்டி ஒன்றில் “உமர் ஒரு ஓரின சேர்க்கை விரும்பி என சிதோரா என்னிடம் அடிக்கடி கூறுவார். உமரின் தந்தை, அவரை பார்த்து ஓரின சேர்க்கையாளனே.. என அவ்வப்போது அழைத்திருப்பதாகவும் சிதோரா என்னிடம் கூறியிருந்தார்” என்று அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
மேலும் சம்பவம் நடந்த நைட் கிளப்பின் வாடிக்கையாளராக உமர் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. ஓரினச் சேர்க்கையாளருக்கான வலைத்தளத்திலும் உமர் தனது பெயரை பதிவு செய்து வைத்துள்ளதும், தற்போது தெரியவந்திருக்கிறது.
இதற்கியைடையே அதிபர் பதவிக்கான வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், “கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் இது ஓரினச் சேர்க்கையை எதிர்த்து நடந்த தாக்குதல் இல்லை என்பதும் பயங்கரவாத தாக்குதல்தான் என்பதும் அம்பலமாகியுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு அமெரிக்காவில் தாக்குதல் நடத்தியுள்ளது உறுதியாகிவிட்டது. ஆகவே அதிபர் பராக் ஒபாமா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.