சென்னை:  சென்னையில் பல பகுதிகளில் இன்று மதியம் 2.30 மணி முதல்வர் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கோவை வெப்பத்தை குளிர்விக்கும் வகையில் பெய்து மழையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள யாஷ் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை திடீரென கருமேகத்துடன் மழை பெய்த நிலையில், 3 மணி நேரம் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்தது. ஆனால், அது பொய்த்துபோன நிலையில், இன்று மதியம் திடீரென வானம் இருட்டியதுடன் சுமார் 2.40 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது.

சென்னை மாநகரமே  இருள் சூழ்ந்து இரவு போல காணப்படுகிறது. பல இடங்களுடன்  இடி மின்னலுடன் கூடிய மழை நகரின் பல இடங்களில் பெய்து வருகிறது. சென்னை மட்டுமின்றி   புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், ரெட்ஹில்ஸ், ஆவடி, பட்டாபிராம், ஆகிய இடங்களிலும் மழை பெய்துள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, போரூர், அம்பத்தூர், ஆவடி, வளசரவாக்கம், வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மீனம்பாக்கம், பல்லாவரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. போரூர், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம், திருவேற்காடு, வளசரவாக்கம், மதுரைவாயலில் பகுதிகளிலும் மழை பெய்தது.

கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்து வரும் மழை பொது மக்கள் வீட்டில் இருந்தபடியே ரசித்து வருகின்றனர்.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மே 24-ம் தேதி புதிய புயல் உருவாகும் இந்த புயல், மே 26-ம் தேதி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.