உலகளவில் கோதுமை உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. இதில் பெரும்பாலும் உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது தவிர சிறு சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இந்திய விவசாயிகள் பசித்தோருக்கு உணவளிக்கும் ‘அண்ணதத்தா’க்களாக போற்றப்படுகின்றனர்.

கோதுமை உற்பத்தியில் உலகளவில் முதலிடத்தில் உள்ள உக்ரைன் நாட்டின் மீது பிப்ரவரி மாதம் ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியதை அடுத்து கோதுமை பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் அதிகரிக்கத் தொடங்கியது.

ஏற்றுமதி செய்யப்படும் இந்திய கோதுமையில் பாதியளவு பங்களாதேஷுக்கு செல்கிறது, தவிர மத்திய கிழக்கு நாடுகளுக்கும் செல்கிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உக்ரைன் கோதுமைக்கு அதிக வரவேற்பு உள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டு கோதுமை விளைச்சலுக்கான சீதோஷ்ண நிலை சீராக இருந்தது என்றும் ஏப்ரல் மாதம் முதல் சற்று உஷ்ணம் அதிகரித்து காணப்படுகிறது இதனால் விளைச்சலில் சிறு சரிவு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கோதுமை விலை அதிகரிக்கத் துவங்கியவுடன் இந்தியாவிலும் கோதுமை மற்றும் கோதுமை மாவு உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

இந்த விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த மே 13 அன்று முதல் கோதுமையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திடீரென ஒட்டுமொத்த தடை விதித்துள்ளது.

இதனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள தீனதயாள் துறைமுகத்தில் (கந்தலா) வெவ்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டிய நான்கு கப்பல்களில் பாதியளவு ஏற்றப்பட்ட கோதுமையோடு அப்படியே நிற்கிறது.

கடலில் மிதந்து செல்ல தேவையான குறைந்த பட்ச எடை இல்லாமலும் கோதுமையுடன் கப்பலை துறைமுக பொறுப்புக் கழகம் செல்ல அனுமதிக்காத நிலையில் துறைமுகத்தில் கப்பலை நிறுத்தி வைக்க கப்பல் நிறுவனங்கள் பெரும் பணத்தை செலவழித்து வருகிறது.

தவிர, ஏற்றுமதிக்காக துறைமுக நடைமேடைகளிலும் லாரிகளிலும் கோதுமை தேங்கி வருவதுடன் எந்த வித பாதுகாப்பும் இன்றி வீணாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு தடை விதிப்பதற்கு முந்திய தினம் இந்திய வர்த்தகத் துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவில் இருந்து வழக்கமாக கோதுமை இறக்குமதி செய்யும் மொரோக்கோ, துனிசியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், துருக்கி, அல்ஜீரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் இந்தியாவில் இருந்து குறித்த நேரத்தில் கோதுமை அனுப்பிவைக்க உத்தரவாதம் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், பிரதமர் அலுவலகத்தின் நேரடி உத்தரவின் பேரில் கோதுமை ஏற்றுமதிக்கு திடீர் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வர்த்தக அமைச்சகம் மிகவும் கொதிப்படைந்துள்ளது.

வர்த்தக அமைச்சகம் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் அதே வேளையில், வேளாண் அமைச்சகம் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

உலக சந்தையில் ஏற்பட்ட திடீர் விலை உயர்வால் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவன முகவர்களுக்கு கோதுமையை விற்று லாபம் ஈட்டி வந்த விவசாயிகள் இந்த தடையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டதாக அரசு கூறியிருக்கும் நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு கொள்முதல் நிலையங்களுக்கு மீண்டும் விற்க வேண்டிய சூழல் நிலவுவதால் தங்கள் உற்பத்திக்கான உரிய விலை கிடைக்குமா என்பது அவர்களுக்கு கேள்விக்குறியாக உள்ளது.

வேளாண் சட்டங்கள், குறைந்த பட்ச ஆதார விலை ஆகியவற்றில் மத்திய பா.ஜ.க அரசின் அலட்சியத்தால் பாதிப்படைந்த விவசாயிகள் இப்போது ஏற்றுமதி தடையால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், பஞ்சாப், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து 4000 லாரிகளில் குஜராத் துறைமுகம் சென்றுள்ள சுமார் 4 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை நிலை குறித்து வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் போர் காரணமாக உலக நாடுகள் பலவற்றில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜி-7 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், ஜி-7 நாடுகள் என அனைத்தும் இந்த தடையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய மோடி அரசு உள்ளூரில் குறைந்த விலைக்கு வாங்கி சேமிப்பு கிடங்குகளில் உணவுப் பொருளை வீணடிக்குமா அல்லது ஜி-7 நாடுகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்து அதனை சர்வதேச சந்தையில் நல்ல விலைக்கு விற்று ஆதாயம் தேடிக்கொள்ளவும் ‘அண்ணதத்தாக்கள்’ என்ற பெயரை தக்கவைத்துக் கொள்ளவும் உதவுமா என்பது மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது.