பீகார் அரசியலில் ராம் விலாஸ் பாஸ்வான், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் வாரிசுகளை தொடர்ந்து நிதிஷ் குமாரின் மகனான நிஷாந்த் குமார் அரசியலில் குதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதியில் பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் நிஷாந்த் குமார் முன்னிலைப் படுத்தப்படுவது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சி பீகாரில் பாஜக மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே சம பலம் பொருந்திய கட்சியாக முன்னிலைப் படுத்தி வருகிறது.
தவிர புதிதாக முளைத்துள்ள பிரஷாந்த் கிஷோர் உள்ளிட்டோரிடம் இருந்து தனது கட்சியின் பலத்தை தக்கவைத்துக் கொள்ள தேர்தல் களத்தில் 48 வயதான பொறியியல் பட்டதாரியான தனது மகன் நிஷாந்த் குமாரை முன்னிலைப் படுத்த நிதிஷ் குமார் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக அவர் திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
வாரிசு அரசியல் குறித்து இதுநாள் வரை விமர்சித்து வந்த நிதிஷ் குமார் தனது வாரிசை அரசியல் களத்தில் இறக்க முயல்வது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
ஒரு தலைவர் எப்போது கட்சி மாறுவார், தனது கொள்கையிலிருந்து யார் பின்வாங்குவார்கள் என்பது யாருக்குத் தெரியும்? பொதுமக்களுக்கு சேவை செய்கிறோம் என்ற பெயரில் தலைவர்கள் எவ்வளவு சேவை செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அவர்களின் நிறம் மாறுகிறது என்று அம்மாநில மக்கள் விமர்சித்து வருகின்றனர்.