ராமேசுவரம்: ராமேஷ்வரம் கடலில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சரக்கு ரயில் சோதனை ஓட்டத்தில் இயக்கியுள்ளது. ஏற்கனவே ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது சரக்கு ரயிலை இயக்கி உள்ளது. இதன் காரணமாக விரைவில் பயணிகள் ரயில் இயக்கும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தென்னக ரயில்வே சமீபத்தில் தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் ரயில்வே கடல் பாலத்தின் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது. விசாரணையில் OHE (மேல்நிலை உபகரணங்கள்) டவர் கார் பாலத்தை கடந்து ராமேஸ்வரம் நிலையத்திற்கு சென்றது. தொடர்ந்து சரக்கு ரயிலை மண்டபத்தில் இருந்து ராமேஷ்வரத்துக்கு இயக்கி உள்ளது.
பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் புதிய பாம்பன் ரயில் பாலப் பணிகளுக்காக 23.12.2023 அன்று முதல் ராமேசுவரத்திற்கு முற்றிலுமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரூ.535 கோடி மதிப்பில் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு சமீபத்தில் பணிகள் முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து பாம்பன், பாலத்தின் நடுவே செங்குத்து தூக்குப் பாலத்தை வெற்றிகரமாக தூக்கி, இறக்கி சோதனை நடைபெற்றது. இந்நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக மண்டபம் -ராமேசுவரம் இடையே இன்று சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. மண்டபத்திலிருந்து பகல் 1.37 மணிக்கு ஒரு இன்ஜினுடன் காலியான 17 சரக்கு பெட்டிகளுடன் புறப்பட்ட ரயில் ராமேசுவரத்திற்கு 2 மணியளவில் வந்தடைந்தது. முதலில் 30 கி.மீ வேகத்தில் சரக்கு ரயில் இயக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக 45 கி.மீ வேகம், 60 கி.மீ வேகம் அதிகரித்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இந்த சோதனை ஓட்டத்தின்போது புதிய பாலத்திலிருந்து பாம்பன் வரையிலுமான புதிய தண்டவாளங்களில் சென்சார் கருவிகள் பொறுத்தப்பட்டு பாலத்தின் தாங்கும் திறன், அதிர்வுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. விரைவில், முதன்மை ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரி தலைமையில் புதிய ரயில் பாலம் ஆய்வு நிறைவைடந்ததும், புதிய பாம்பன் பாலம் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாம்பன் பாலம் பழுது காரணமாக கடந்த 22 மாதங்களாக ராமேசுவரத்திற்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய புதிய பாலம் பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டங்களும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதால், விரைல் பயணிகள் ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.