சென்னை:

திச்சநல்லூரில் அகழ்வராய்ச்சி செய்யும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், ஆதிச்சநல்லூர், கொற்கை, அழகன் திருக்குளத்தில் அகழ்வாராய்ச்சி மையம் அமைக்க மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது என்று தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் காமராஜ் என்பவர்  மதுரை  உயர்நீதிமன்ற கிளையில் ஆதிச்ச நல்லூர் அகழ்வராய்ச்சி பணி தொடரக்கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில்,

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க இடம் ஆதிச்சநல்லூர். இங்கு அழகாய்வு பணி 2004 பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. இந்த ஆய்வில் 114 ஏக்கர் பரப்பளவில் இடுகாடு அமைந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஏராளமான பழங்கால பொருட்களும் கண்டெடுக்கப்பட்டது. ஆதிச்சநல்லூரில் இதுவரை 4 கட்ட அகழாய்வு நடைபெற்றுள்ளது. இந்த அகழாய்வு குறித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இங்கு எடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் சென்னையிலும், வெளிநாடுகளிலும் உள்ளன. எனவே ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தவும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிடவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு முன்பாக நடைபெற்ற விசாரணையின்போது,  மத்திய தொல்லியல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு பணியை மேற்கொள்ளும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும், அது கொள்கை ரீதியான முடிவு என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து,   ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு செய்ய இயலுமா? இயலாதா? என்பது குறித்து மத்திய தொல்லியல்துறை தலைமை இயக்குநர் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய நீதிபதிகள்  உத்தரவிட்டனர்.

மேலும், பாரம்பரியத்தின் பழமையை அறிந்து கொள்ளும் வகையில், மாநில அரசு மறு அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் எனவும், இதுதொடர்பாக தமிழக அரசும் விளக்க வேண்டும் எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், ஆதிச்சநல்லூர், கொற்கை, அழகன் திருக்குளத்தில் அகழ்வாராய்ச்சி மையம் அமைக்க மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது என்று தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறி உள்ளார்.