சென்னை
தமிழக அரசின் சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 18-ந் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத் தொடரின்போது அரசு துறைகளுக்கு மானிய கோரிக்கைகளை ஒதுக்குவது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்ம் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி தமிழக நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் கடந்த மார்ச் 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற்றது. அத்துடன் சட்டசபையின் நிகழ்ச்சிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்குவது குறித்து துறை சார்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தி ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
இதன் காரணமாக சட்டமன்ற கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஜூன்) தொடங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஜூன் 3வது வாரத்தில் தொடங்கி ஏறக்குறைய ஒரு மாத காலம் கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக ஜூன் 18-ந் தேதியன்று சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்பிருப்பதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.