டில்லி:
ஆதார் கட்டாயம் என்பது தேச பாதுகாப்பிற்கு ஆபத்தானது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
நலத்திட்ட உதவிகள், சலுகைகள் போன்றவற்றை பெறுவதற்கு ஆதார் எண்ணை பொதுமக்கள் இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
இந்த இணைப்பினை டிசம்பர் 31-ம் தேதிக்குள் செய்து முடித்து விட வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்திருந்தது. ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நீட்க்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்குவதற்கு எதிரான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளது.
5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழக்குகளை நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் விசாரிக்கிறது எனவும் சுப்ரீம் கோர்ட்டு கூறிஉள்ளது. ஆதார் கட்டாயம் என்ற நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் ஆதார் கட்டாயம் ஆக்கப்படுவதற்கு பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் சுப்பிரமணியன் சாமி வெளியிட்டு உள்ள செய்தியில், “ஆதார் கட்டாயமாக்கப்படுவது எப்படி தேச பாதுகாப்பிற்கு ஆபத்தானது என்பது தொடர்பாக விளக்கமாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வருகின்றேன். உச்சநீதிமன்றத்தில் ஆதார் கட்டாயம் ஆக்கப்படுவதை தடுக்கவேண் டும்,” என குறிப்பிட்டுள்ளார்.