டில்லி

டந்து முடிந்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற இடைத்தேர்தல்களில் பாஜக பெற்ற தோல்வி ஒரு எச்சரிக்கை மணி ஓசை என பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறி உள்ளார்.

தற்போது நடந்து முடிந்த நான்கு மக்களவை மற்றும் 10 சட்டப்பேரவை இடைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.   இந்த தேர்தலில் ஒரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு பாராளுமன்ற தொகுதியிலும் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது.  இது பாஜகவினர் இடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.   இது குறித்து  பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

சுப்ரமணியன் சுவாமி, ”இந்த தோல்வி கண்டு கட்சித் தொண்டர்கள் மனக் கலக்கம் அடைய வேண்டாம்.  இந்த தேர்தலில் முழுக்க முழுக்க தலைவர்களை முன்னிறுத்தி பாஜக பிரச்சாரம் செய்தது.   தொண்டர்களை முன்னிறுத்த வேண்டும் என இந்த தோல்வி கட்சிக்கு ஒரு எச்சரிக்கை மணி ஓசையை அளித்துள்ளது.

தற்போது ஜாதி ரீதியாக கட்சிகள் வெற்றி பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.   அது உண்மை தான்.  தலித் தலைவரான மாயாவதி யாதவர்கள் மற்றும் ஜாட் வகுப்பினருடன் முதல் முறையாக மாபெரும் கூட்டணி அமைத்துள்ளார்.   இதனால் நாம் தோல்வி அடைந்தாலும் இந்து மதத்திற்கு வெற்றிதான் நேர்ந்துள்ளது.   நான் இந்துத்வாவை கையில் எடுத்துக் கொண்டால் நமக்கு வரவிருக்கும் தேர்தலில் பல இடங்களில் வெற்றி கிடைக்கும்.

இடைத் தேர்தல் தோல்வி என்பது மக்கள் நமக்கு தரும் சிறு தண்டனை.  ஆனால் பொதுத் தேர்தலில் அவர்கள் நம்மை தண்டிக்க மாட்டார்கள்.   இது போல ஒரு மாபெரும் கூட்டணி தொடர்ந்தால் அது சீன ஆதரவு கம்யூனிஸ்டுகளுக்கும், பாகிஸ்தான் ஆதரவு காங்கிரசுக்கும் நன்மை பயக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.   தற்போது இளைஞர்கள் நம் பக்கம் உள்ளனர்.  அந்த இளைஞர்கள் வாக்குகளை நமக்கே கிடைப்பதை நாம் உறுதிப்படுத்தியாக வேண்டும்” என தெரிவித்துள்ளார்.