புதுடெல்லி: பாரதீய ஜனதாவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா, போலி டிவிட்டர் பதிவுகளைப் பயன்படுத்தி, தனக்கெதிரான எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணிய சுவாமி.
மேலும், அத்தகைய நபர்களை கட்சியைவிட்டு நீக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். எதிர்ப்பு பிரச்சாரம் என்று குறிப்பிட்ட சுவாமி, அது என்னவகை எதிர்ப்பு என்பதைக் குறிப்பிடவில்லை.
“பாரதீய ஜனதாவின் ஐடி செல் மோசமான ஒன்றாக மாறிவிட்டது. அதன் உறுப்பினர்களில் சிலர், போலி ஐடி டிவீட்டுகளின் மூலம் என்னைத் தாக்குகின்றனர். இதனால், எனது தொண்டர்கள் கொதித்தெழுந்து, அதற்கு பதில் தாக்குதல் தொடுத்தால், அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன். எப்படி, தனது ஐடி செல் உறுப்பினர்களின் செயலுக்கு பாரதீய ஜனதா பொறுப்பாகாதோ அப்படித்தான் இதுவும்.
இந்த தாக்குதல்களை அலட்சியம் செய்யுமாறு என்னிடம் கூறுகின்றனர். நான் அவற்றை அலட்சியம் செய்யத் தயார். ஆனால், அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்” என்றுள்ளார் சுவாமி.