சுபவீ எழுதும் போராட்டங்கள் – வைக்கம் போராட்டம்

Must read


குளித்தலையில், திருச்சி மாவட்டக் காங்கிரஸ் மாநாடு நடைபெறவிருந்த நேரத்தில், அப்போது காங்கிரஸ் கட்சியின் சென்னை மாகாணத் தலைவராக இருந்த ஈ.வே.ராமாசாமி என்னும் பெரியார், மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தார். மேற்கே கம்பம் வரையில் அப்போது மதுரை மாவட்டம்தான். உத்தமபாளையம் அருகில் பண்ணைப்புரம் என்னும் ஊரில் (இளையராஜா பிறந்த அதே பண்ணைப்புரம்தான்) பெரியார் பொதுக்கூட்டம் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு ஒரு தந்தி, ஈரோட்டிற்கு வந்துள்ள செய்தி சொல்லப்பட்டது.
கேரள காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கே.பி.கேசவமேனனிடமிருந்து அந்தச் செய்தி வந்திருந்தது. கோட்டயம் மாவட்டம் வைக்கம் என்னும் ஊரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்தில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கேசவ மேனன் அழைத்திருந்தார்.
குளித்தலை மாநாடு இருப்பதால் என்ன செய்யலாம் என்ற சிந்தனையுடன், பெரியார் ஈரோடு சென்றார். தொடர் சுற்றுப்பயணம் காரணமாக அவருக்கு வயிற்றுக்கடுப்பு ஏற்பட்டு உடல் நலமில்லாமல் இருந்தது. எனினும், உடம்புக்கு ஒன்றுமில்லை என்று தன் துணைவியார் நாகம்மையாரிடம் சொல்லிவிட்டுப் பெரியார் வைக்கம் புறப்பட்டார்.
சரி, அது என்ன வைக்கம் போராட்டம்? அதனை யார் தொடங்கினார்கள்? அது எப்படி முடிந்தது? – என்பன போன்ற கேள்விகளுக்கான விடையை நாம் எளிதில் அறிந்து கொண்டுவிட முடியும். ஆம். அப்போராட்டம் குறித்து அவ்வளவு செய்திகளும், பல நூல்களும் வந்துள்ளன. பெரியாரே அதுகுறித்துப் பலவிடங்களில் எழுதியும், பேசியும் உள்ளார். சாமி. சிதம்பரனார், கவிஞர் கருணானந்தம் ஆகியோர் எழுதியுள்ள அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்களிலும் அச்செய்தி உள்ளது. வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கை மிகவும் சிறுமைப்படுத்தி ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரைகளிலும், அதற்கு மறுப்பாக வந்துள்ள கட்டுரைகளிலும் கூட நிறையக் குறிப்புகள் உள்ளன. திரு.வி.க. வின் வாழ்க்கை வரலாற்று நூலும் அது பற்றிப் பேசுகிறது. இப்போராட்டம் குறித்து மட்டும் அமலா எழுதியுள்ள நூல் குறிப்பிடத்த்தக்கது.
எல்லாவற்றையும் தாண்டி, கடந்த ஜனவரி மாதம், பழ. அதியமான் எழுதி வெளியிட்டுள்ள “வைக்கம் போராட்டம்” என்னும் 650 பக்கங்களைக் கொண்ட நூல், தன்னுள் எல்லாத் தரவுகளையும் கொண்டுள்ளது.

வைக்கம் மஹாதேவ கோயில்

வைக்கம் போராட்டம் என்பது கோயில் நுழைவுப் போராட்டம் என்றே பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் அது கோயிலைச் சுற்றி இருக்கும் தெருக்களில் நடப்பதற்கு, ஈழவர், புலையர், தீயர் ஆகிய மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து நடந்த மனித உரிமைப் போராட்டமே!
அந்தப் போராட்டத்தைத் தொடங்கியவர்கள், கேரள காங்கிரஸ் கட்சியினர்தாம். கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப், டி.கே.மாதவன் ஆகியோர் அப்போராட்டத்தில் முன்னின்றனர்.
1924 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கத்தில், மனித உரிமைகளுக்கான போராட்டமாக இதனைத் தொடங்குவது என்று அவர்கள் முடிவு செய்தனர். அதற்கான அனுமதியையும், வாழ்த்துகளையும் கோரி, காந்தியாருக்குக் கடிதம் எழுதினர். “காவலர்கள் எவ்வளவு பலப்பிரயோகம் செய்தாலும், அகிம்சை முறையிலேயே போராட வேண்டும் என்ற நிபந்தனையுடன், மார்ச் 18 ஆம் தேதி, போராட்டத்தை வாழ்த்தி காந்தியார் விடை மடல் எழுதியிருந்தார்.
1924 மார்ச் 30 ஆம் தேதி வைக்கம் போராட்டம் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் உட்பிரிவான தீண்டாமை விலக்குக் குழு அப்போராட்டத்தை முன்னெடுத்தது. காங்கிரஸ் தலைவர்கள் கேசவ மேனன், ஏ.கே. பிள்ளை, வேலாயுத மேனன், டி. .கே. மாதவன், டி .ஆர்.கிருஷ்ணசாமி அய்யர் உள்ளிட்டோர் தலைமையில் பெருந்திரளாக மக்கள் அப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஈழவர், புலையர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டது, போராட்டத்தின் வெற்றிக்கு அடிகோலியது.
ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்று பேர் மட்டுமே சத்தியாகிரகத்தில் ஈடுபடுவதென்று முடிவாயிற்று. காவல்துறை தடுக்கும் இடத்த்தில் அனைவரும் நின்றுவிட, அந்த மூவர் மட்டும் தடை கடந்து, கோயிலைச் சுற்றியுள்ள தெருவில் நடக்க முயற்சிப்பது என்பது திட்டம்.

முதல் நாள் போராட்டத்தில், குஞ்சப்பா என்னும் புலையர் சமூகத்தைச் சேர்ந்தவரும், பாஹுலைன் என்னும் ஈழவ சமூகத்தைச் சேர்ந்தவரும், கோவிந்த பணிக்கர் என்னும் நாயர் சமூகத்தைச் சேர்ந்தவரும் தடையை மீறினர். தடுத்தும் நிற்காத காரணத்தால் அம்மூவரும் அன்று கைது செய்யப்பட்டனர்.
போராட்டம் தொடங்கிய பத்தே நாள்களில், போராட்டக் குழுத் தலைவர்கள் அனைவரும் கைதாகி விட்டனர். அந்த நிலையில்தான், வெளியில் இருந்த ஜார்ஜ் ஜோசப் காந்தியாருக்கு உதவி கேட்டுக் கடிதம் எழுதினார். அதற்குக் காந்தியார், வடநாட்டிலிருந்து இப்போதைக்கு யாரும் வர இயலாத நிலை இருப்பதாகவும், சென்னை மாகாணத்தைச் சேர்ந்த தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் பதில் அனுப்பினார். அந்த அடிப்படையில்தான், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் பெரியாருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.
1924 ஏப்ரல் 13 ஆம் தேதி, பெரியார் வைக்கம் வந்து சேர்ந்தார். வந்த நாள் முதல், வைக்கத்தைச் சுற்றியுள்ள ஊர்கள் பலவற்றில், பெரியார் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் கூட்டங்களில் பேசினார். “ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தலைமை இயக்கத்துக்குப் புத்துயிர் கொடுத்தது” என்று குறிப்பிடுகின்றார் டி.கே. ரவீந்திரன்,
மக்களைப் பார்த்துப் பெரியார் எழுப்பிய சில கேள்விகள் அனைத்து சாதி மக்களையும் சிந்திக்க வைத்தன. குறிப்பாக, அவர் முன்வைத்த மூன்று கேள்விகளைப் பார்க்கலாம் –

  1. கள்ளை இறக்குவதால், தீயர் தாழ்ந்தவர்கள் என்றால், அவர்கள் இறக்கும் கள்ளை அருந்துபவர்கள் அவர்களை விடத் தாழ்ந்தவர்களாகத்தானே இருக்க முடியும்…….
  2. நம் உடம்பில், வலது பக்கம், இடது பக்கத்தை விட உயர்ந்தது என்றால், நம்மை யாராவது அவர்களின் வலது காலால் உதைத்தால் சந்தோஷப்படுவோமா?
  3. இறக்கும் கால்நடைகளை அறுக்கும் பறையர் சமூகத்தினர் தீண்டத்தகாதவர்கள் என்றால், மனித உடலை அறுக்கும், பிராமண டாக்டர்களிலும், நாயர் டாக்டர்களிலும் தீண்டத்தகாதவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள்?

இவை போன்ற உரைகள், மக்களிடம் புதிய சிந்தனையைத் தூண்டின. ஒரே மாதத்தில் மக்களிடம் அந்தப் போராட்டத்திற்கான ஆதரவு பெருகுவதைக் கண்ட சமஸ்தானம் அஞ்சத் தொடங்கியது. வைக்கத்திற்குள் நுழைவதற்கும், கூட்டங்களில் பேசுவதற்கும் பெரியாருக்குத் தடை விதித்தது.
தடையை மீறிப் பெரியார் பொதுக்கூட்டங்களில் பேசினார். அதனால் மே 21 ஆம் நாள் அவர் கைது செய்யப்பட்டார். நீதிபதி, “நீங்கள் ஏதும் சொல்ல விரும்புகின்றீர்களா?” என்று கேட்டபோது, வழக்கம்போல, “நீதிமன்றம் நியாயம் செய்யும் என்று நான் நம்பவில்லை. இதுவெல்லாம் வெறும் வேஷம். நான் எதனையும் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம்” எனச் சொல்லிவிட்டார்.
ஒரு மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு, அருவிக்குத்து சிறையில் அடைக்கப்பட்டார். இத்தருணத்தில், பெரியாரின் துணைவியார் நாகம்மையார் வைக்கம் வந்துவிட்டார். பெரியார் சிறையில் இருந்த ஒருமாத காலமும், பரப்புரையில் எந்தத் தொய்வும் ஏற்படாமல், மற்ற பெண்களையும் சேர்த்துக்கொண்டு, அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ராஜாஜியும், வரதராஜுலு நாய்டுவும் வைக்கம் வந்து பெரியாரைச் சிறையில் சந்தித்துச் சென்றனர்.
சரியாக ஒரு மாதத்தில், சிறையில் இருந்து வெளிவந்த பெரியார் ஈரோடு திரும்பிவிடுவார் என்று கருதினார்கள். ஆனால் அவரோ மீண்டும் வைக்கம் போராட்டக் களத்திற்குச் சென்றுவிட்டார். தாளமுடியாத கோபம் கொண்ட சமஸ்தான அரசு, அவரை மீண்டும் சிறையில் அடைத்தது. வெளியில் வந்தவர் ஒரு மாதம் முடிவதற்குள் ஜூலை 18 ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த முறை அவருக்கு நான்கு மாதம் சிறை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.முதலில் கோட்டயம் சிறையிலும், பிறகு திருவனந்தபுரம் சிறையிலும் இருந்தார்.
அப்போதுதான், பெரியார் தன் உரையில் கேலியாகக் குறிப்பிடும் அந்த நிகழ்வு நடந்தது. “நம்பூதிரிப் பார்ப்பனர்களும், வைதீகர்களும் சேர்ந்துகொண்டு, பெரியாரையும், ஐயா முத்து கவுண்டர் ஆகியோரையும் அழிக்க வேண்டும் என்று வேண்டி, “சத்ரு சங்கார யாகம்” நடத்தினர். சத்ரு என்றால் எதிரி. எதிரியை அழிப்பதற்கான யாகம் அது. அந்த யாகம் நடந்து முடிந்த சில நாள்களில், இரவில் வேட்டுச்சத்தம் கேட்டது. சிறையிலிருந்த காவலர்களை அழைத்து, என்ன சத்தம் என்று பெரியார் கேட்டார்.
“மஹாராஜா திருநாடு எழுந்துவிட்டார்” என்றனர் காவலர்கள். அதாவது மன்னர் இறந்துபோய் விட்டார் என்பதையே அப்படிச் சொன்னார்கள். இவர்களைக் கொல்வதற்காக நடத்திய யாகம் மன்னரையே கொன்றுவிட்டது போலும். எவ்வாறோ, அடுத்து யுவராஜா பட்டம் சூட்டிக் கொள்கிறார் என்பதை வைத்து, கைதிகள் அனைவரையும் விடுதலை செய்தனர். நான்கு மாதத் தண்டனை ஒரு மாதத்தில் முடிந்தது.
நாகம்மையாரும் போராட்டத்தில் சிறை சென்றார் என்று திருவிக குறிப்பிடுகின்றார். “ஸ்ரீமான் ராமஸ்வாமி நாயக்கரின் மனைவி மற்ற ஸ்திரீகளோடு சேர்ந்து பிரச்சார வேலையும், பண வசூலும் செய்து வருகின்றனர்……..நாகம்மையாருக்கும் இன்னொரு ஸ்திரீக்கும், போக்குவரத்துக்குத் தடையாக இருந்ததாகச் சொல்லி, ஐந்து ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதனைக் கட்ட மறுத்து, கோர்ட் கலையும்வரை அங்கேயே இருந்தனர். விசாரணைக்கு முந்தி எட்டு நாள்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டனர்” என்று சுதேசமித்திரன் செய்தியைத் தன் நூலில் எடுத்துக் காட்டுகின்றார், பேராசிரியர் மங்களமுருகேசன். எனினும் நாகம்மையார் சிறை சென்றதாகத் தெரியவில்லை என்பது அதியமானின் நூல் தரும் செய்தி.
இரண்டாம் முறை சிறைமீண்ட பெரியார் சற்று ஓய்வுக்காக ஈரோடு திரும்பினார். ஆனால் அங்கு, எப்போதோ பேசிய ஒரு பேச்சைக் காட்டி ராஜ துரோக வழக்கில் பிரித்தானிய அரசாங்கம் அவரைக் கைது செய்துவிட்டது.

வைக்கம் போராட்டம் ஓராண்டிற்கு மேலாக நீடித்தது. 1925 மார்ச் மாதம், இதனைத் தீர்த்துவைக்கும் நோக்கில், காந்தியார் வைக்கம் வந்தார். அப்போது பெரியார் அங்கு இருந்தார். காந்தியாரை மகாராணி அழைத்துப் பேசினார். இருவருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் நெருங்கியது. தெருக்களில் நடக்க அனுமதி அளித்து விடுகிறோம். ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர், பிறகு கோயிலுக்குள் செல்வோம் என்று பேசக்கூடாது என்றார் மகாராணி. காந்தியார் முடிவு ஏதும் சொல்லவில்லை. நான் நாயக்கரைக் கேட்காமல் எதுவும் சொல்வதற்கில்லை என்று சொல்லி, பேச்சுவார்த்தையைப் பாதியில் நிறுத்திவிட்டு, பெரியார் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு வந்தார்.
“இப்போதைக்கு வேண்டுமானால் கோயில் நுழைவு கோரிக்கையை வைக்கவில்லை. முதலில் தெருக்களைத் திறந்துவிடச் சொல்லுங்கள்” என்றார். அதற்குப் பிறகும் சில மாதங்கள் இழுபறியாகவே இருந்தது. இறுதியில் கீழவீதியைத் தவிரப் பிற தெருக்களில் எல்லோரும் நடமாடலாம் என்று அரசி அறிவித்தார். கீழ வீதிக்கு மட்டும் என்ன விதிவிலக்கு என்று தெரியவில்லை. எவ்வாறாயினும், போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
1925 நவம்பர் இறுதியில் வைக்கத்தில், சத்தியாகிரக வெற்றிவிழா, பெரியார் தலைமையில் நடைபெற்றது. இப்போது அங்கு பெரியாரின் சிலை உள்ளது.

இத்தனை உண்மைகளையும் போகிற போக்கில் மறைத்துவிட்டு, ஜெயமோகன் போன்றவர்கள், “வைக்கம் போராட்டக்குழு, அதிகமான போராட்டக்காரர்களை கைதாக்கி அரசுக்கு நெருக்கடி கொடுத்தது. அவ்வாறு கைதானவர்களில் ஒருவர் மட்டுமே அவர் (பெரியார்). எவ்வகையிலும் அன்று அவர் முக்கியமானவராகக் கருதப்படவில்லை, அப்போது தமிழக அரசியலில் கூட அவரது இடம் என ஏதும் இருக்கவில்லை” என்று குறிப்பிடுகின்றார். (தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் அப்போது பதவி வகித்தார்). இவ்வளவு பெரிய பொய்யை எழுதுவதற்கும் ஒரு துணிவு வேண்டும்தானே! ஜெயமோகனின் பொய்களைத் தக்க சான்றுகளுடன் தன் நூலில் உரித்துக் காட்டியுள்ளார் சுகுணா திவாகர்.
ஒற்றுமையும், நீடித்த போராட்டமும் இறுதியில் வெற்றியைத் தேடித் தரும் என்பதே வைக்கம் போராட்டம் கற்றுத் தரும் பாடம்.
(களங்கள் தொடரும்)
அன்புடன்
சுப.வீரபாண்டியன்
பயன்பட்ட நூல்கள்
==================
1. அதியமான், பழ. – “வைக்கம் போராட்டம்” – காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்
2. மங்கள முருகேசன், ந.க., முனைவர், பேராசிரியர் – “தோழர் ஈ.வே.ரா. நாகம்மையார்” – தென்றல் பதிப்பகம், சென்னை-14
3.சுகுணா திவாகர் – “பெரியார், அறம் , அரசியல், அவதூறுகள்” – கருப்புப் பிரதிகள், சென்னை-5
4. கருணாநந்தன், அ., பேராசிரியர் – “பெரியார் நாராயண குரு விவேகானந்தர்” – கருஞ்சட்டைப் பதிப்பகம், சென்னை-24
Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.

More articles

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article