1975 ஜூன் 12 – அலகாபாத் உயர்நீதி மன்றம் –
வழக்கத்திற்கு மாறாகப் பெரும் திரளாக மக்கள் கூடியிருக்கின்றனர். எல்லோருடைய முகங்களிலும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு! ஒரு விதமான பரபரப்பு!
சரியாக 10 மணிக்கு, நீதிபதி ஜஃமோகன்லால் சின்ஹா தன் இருக்கையில் வந்து அமர்கிறார். அவ்வளவு பெரிய கூட்டம். ஆனால் ஒரு துளி ஒலியும் இல்லை. எங்கும் நிசப்தம். நீதிபதி தன் தீர்ப்பின் இறுதிப் பகுதியை (operative part )ப் படிக்கத் தொடங்குகின்றார்.
“திரு ராஜ் நாராயண் தொடுத்துள்ள இவ்வழக்கில், அவருடைய ஏழு குற்றச்சாற்றுகளில், 1 மற்றும் 3 ஆவது குற்றச்சாற்றுகளை இந்நீதிமன்றம் ஏற்று, ரேபரேலி தொகுதியிலிருந்து திருமதி இந்திரா நேரு காந்தி நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது செல்லாது என்று தீர்ப்பளிக்கிறது”
அவ்வளவுதான்……நீதிமன்றம் முழுவதும் ஒரே ஆர்ப்பாட்டம். அமைதி, அமைதி என்று நீதிமன்றக் காவலர்கள் எழுப்பிய குரல் யார் காதிலும் விழவில்லை. அதற்குப் பின் நீதிபதி படித்த மீதிப் பகுதியும் யாருக்கும் கேட்கவில்லை!
அப்போது இந்திரா காந்தி வெறும் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமில்லை. இந்தியாவின் பிரதமரும் கூட! எனவே இந்தத் தீர்ப்பு, இந்தியாவின் அரசியலையே புரட்டிப் போட்டது! இன்றைக்கு இருப்பதைப் போல ஊடகங்கள், தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள் எதுவும் இல்லாத அந்த நாள்களிலேயே நாடெங்கும் செய்தி தீயாய்ப் பரவிவிட்டது.
இந்திராகாந்தி அம்மையாரின் வழக்கறிஞர் எஸ்.சி. காரே (S .C . Khare) அடுத்த 15 ஆவது நிமிடத்தில், நீதிபதியிடம் ஒரு மனுவைக் கொடுத்து, தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு 20 நாள்கள் தடை வாங்கிவிட்டார். இடைப்பட்ட காலத்தில் உச்ச நீதி மன்றம் செல்வதே திட்டம்.
ஜெயப்பிரகாஷ் நாராயண்

சட்டப்படி, இந்திரா காந்தி பதவியில் நீடிக்கலாம் என்றாலும், பிரதமராக இருக்கும் உரிமையைத் தார்மிக அடிப்படையில் இழந்துவிட்டார் என்று எதிர்க்கட்சிகள் கூறின. குறிப்பாக, அன்று இந்திரா காந்திக்கு எதிராக ஒரு பேரியக்கத்தைக் கட்டி எழுப்பியிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் அதே கருத்தைத் தெரிவித்தார். சித்தாந்த அடிப்படையில் நேர் எதிரானவர்களான ஜனசங்கத்தினரும், பொதுவுடைமைக் கட்சியினரும் இந்திரா காந்திக்கு எதிரான ஒரே நிலைப்பாட்டை எடுத்தனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, மோகன் தாரியா, சந்திரசேகர், கிருஷ்ண காந்த், ராம் தன் ஆகியோரும் இந்திரா காந்தி பதவியில் நீடிக்கக்கூடாது என்னும் கருத்தையே கொண்டிருந்தனர். மோகன் தாரியா பத்திரிகையாளர்களிடமே தன் கருத்தைக் கூறிவிட்டார்.
நாட்டில் மட்டுமின்றிக் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு குழப்பம் இருப்பதாக மக்கள் எண்ணினர். தீர்ப்பு வெளியான நாள் மாலை, தில்லியில், இந்திரா காந்தியின் வீட்டில் ஆயிரக்கனக்கான காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர். இந்திரா வாழ்க என்னும் முழக்கம் ஓங்கி ஒலித்தது. இந்திரா பதவி விலகக் கூடாது என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
மாலை 6 மணியளவில் இந்திரா அவர்கள் முன்னிலையில் பேசினார். நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று வந்திருப்பதைப் போலவே அவர் காட்டிக்கொள்ளவில்லை. “இவ்வளவு காலம் மக்களுக்காகக் காங்கிரஸ் கட்சி பாடுபட்டதைப் போல இனியும் தொடர்ந்து பாடுபடும்” என்று சொல்லி முடித்துக் கொண்டார். அவருடைய அரசியல் அனுபவம், எதனையும் வெளியில் காட்டிக் கொள்ளாத துணிவு ஆகியன அவருக்குக் கை கொடுத்தன. எனினும், அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பு மக்களிடையே தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது.
அடுத்த நாள் அமைச்சரவைக் கூட்டமும். 18 ஆம் தேதி காங்கிரஸ் கட்சிக் கூட்டமும் நடைபெற்றன. இரண்டிலும், இந்திரா காந்தி பதவியில் தொடர வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. மூத்த அமைச்சர்கள் சவாண், ஜெகஜீவன் ராம் ஆகியோரிடம் ஒரு சிறு தயக்கம் தெரிந்த போதிலும், அவர்களும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
அன்றைய அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பரூவா ஓர் உச்ச நிலையைக் கையில் எடுத்து. “India is Indira and Indira is india” என்ற முழக்கத்தைக் காங்கிரஸ் கூட்டத்தில் எழுப்பினார். அதனையே நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ்காரர்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரான அந்த முழக்கத்தைக் கவிஞர் கண்ணதாசன் தமிழில், “இந்தியாவே இந்திராதான், இந்திராதான் இந்தியாவே” என்று பாடி வைத்தார்.
இந்திரா பதவி விலகப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. ஜே பி (ஜெயபிரகாஷ் நாராயண்) யின் தலைமையிலான ஆர்ப்பாட்டங்களும் நாட்டில் செல்வாக்குப் பெற்றன.
உச்சநீதிமன்ற நீதிபதி, வி.ஆர். கிருஷ்ணய்யர் இந்திரா காந்தி வழக்கை எடுத்துக் கொண்டார். உச்ச நீதிமன்றம் தலையிட்டவுடன், உயர்நீதிமன்றத்தின் தடை தானாகவே காலாவதியாகிவிட்டது. எனவே இனிமேல், உச்சநீதிமன்றத்தின் கையில்தான் இந்திய அரசியலின் எதிர்காலம் என்பது தெளிவானது. எந்த நேரத்திலும், எந்த ஓர் அறிவிப்பும் உச்ச நீதி மன்றத்திலிருந்து வரலாம் என்கிற நிலை ஏற்பட்டது.
சஞ்சய் காந்தியுடன்

இந்தக் கட்டத்தில் நடைபெற்ற இரண்டு மிகப் பெரிய பேரணி, மாநாடுகள் வரலாற்றில் இடம்பெற்றவை. ஒன்று தில்லி, போட் கிளப்பில், சஞ்சய் காந்தியின் முயற்சியால் நடத்தப்பட்டது. அரசின் அனைத்து வலிமையையும் ஒன்று கூட்டி நடத்தப்பட்ட பெரும் பொதுக்கூட்டம் அது! 5 லட்சம் பேர் அங்கு கூடினர் அல்லது கூட்டப்பட்டனர். இந்திரா காந்தி தன் நிறைவுரையில், இது தனக்காகக் கூட்டப்பட்ட கூட்டம் இல்லை என்றும், நாட்டிற்கு வந்துகொண்டிருக்கும் ஆபத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே கூட்டப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இன்னொரு கூட்டம், தில்லி, ராம் லீலா மைதானத்தில் கூட்டப்பட்டது. அதில் ஜெ பி இறுதி உரை ஆற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாட்னாவிலிருந்து புறப்பட வேண்டிய விமானம், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு விட்டதால், அவரால் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அதிலும் ஏதோ சதி இருக்கிறது என்று கூட்டத்தில் பேசப்பட்டது. அந்தக் கூட்டத்தின் இறுதியில் மொரார்ஜி தேசாய் பேசினார். அதிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்துத்தான், இனி அடுத்த கட்ட நகர்வு என்று எல்லோரும் கருதிக் கொண்டிருந்தபோதுதான், இந்திரா காந்தி அப்படி ஒரு முடிவை எடுத்தார்.
குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுடன்

1975 ஜூன் 25 ஆம் தேதி நள்ளிரவில், இந்திரா காந்தியும், சித்தார்த்த சங்கர் ரேயும், குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுவை அவர் மாளிகையில் சென்று சந்தித்தனர். உடனடியாக நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டும் என்றனர்.
“நாட்டை மிகப் பெரிய அபாயம் சூழ்ந்து வருவதால், இந்திய அரசமைப்புச் சட்டம் 352(1) ஆம் பிரிவின்படி, இன்று நள்ளிரவு முதல் இந்தியா முழுவதும் உள்நாட்டு நெருக்கடி நிலை அறிவிக்கப்படுகிறது” என்னும் நான்கு வரிகளைக் கொண்ட ஆணையில், இரவு 11.45 மணிக்கு, குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டார். நாட்டின் வரலாற்றையே மாற்றுவதற்கு நான்கு வரிகள் போதுமானவையாக இருந்தன.
நாட்டை இருள் சூழ்ந்தது!

இரவோடு இரவாக, நாடெங்கும் உள்ள, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஜெ.பி., மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் மோகன் தாரியா, சந்திரசேகர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். எதற்காகக் கைது செய்யப்படுகிறோம் என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. மறுநாள் காலை 7 மணி வரையில் அதிகாரபூர்வமாக மக்களுக்கும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
மக்களுக்கு மட்டுமில்லை, அமைச்சரவைக்கு கூடத் தெரிவிக்கப்படவில்லை. பெரிய பெரிய அதிகாரிகளும் நாட்டில் என்ன நடக்கிறது என்று அறிந்திருக்கவில்லை. அன்று பஞ்சாபின் முதலமைச்சராக இருந்த கியானி ஜெயில் சிங் சொல்லும் வரையில், நாட்டில் இவ்வளவு பெரிய மாற்றம் நடந்துள்ளது என்று தனக்கே தெரியவில்லை என்கிறார் அங்கு பணியாற்றிய ஒரு மாவட்ட ஆட்சியர். ‘தி ட்ரிப்யூன்; பத்திரிகை ஆசிரியரைக் கைது செய்து, அந்த பத்திரிகை அலுவலகத்தையும் மூடி சீல் வையுங்கள் என்று முதலமைச்சர் கூறியபோது, காரணமே தெரியாமல் விழித்தேன் என்கிறார் அவர்.
நெருக்கடி நிலைக்கு முதல் பலியானது பத்திரிகை சுதந்திரம்தான்!

மறுநாள் காலை, பிரதமர் இந்திரா காந்தி வானொலியில் உரையாற்றிய போதுதான், நாட்டில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்துள்ளது என்பது மக்கள் அனைவருக்கும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த உரையின் சுருக்கத்தைப் பேராசிரியர் இரா. சுப்பிரமணி தன் நூலில் தந்துள்ளார். அலகாபாத் வழக்கு – தீர்ப்பு என எதனைப் பற்றியும் குறிப்பிடாமல், நாட்டிற்கு வந்துள்ள பேரபாயத்தைப் போக்கவே தான் ஒரு முடிவெடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டதாக அவர் கூறினார். அவருடைய உரையின் ஒரு பகுதி இவ்வாறு அமைந்திருந்தது –
“இந்தியாவில் ஏழை எளிய மக்கள் மற்றும் மகளிரின் நலன்களுக்காக நான் சில முற்போக்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினேன். அப்போதிருந்தே ஆழ்ந்த, பரவலான சதி உருவாகிக் கொண்டிருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மக்களாட்சியின் பெயரால், மக்களாட்சி செயல்படுவதைக் குலைக்கும் முயற்சிகள் செய்யப்படுகின்றன.இராணுவத்தையும், காவல்துறையையும் கலகம் செய்யும்படி தூண்டிவிடும் அளவிற்குச் சிலர் சென்று விட்டனர்”
இந்த அடிப்படையில்தான் நெருக்கடி நிலை கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறி, அதனை நியாயப்படுத்த அவர் முயன்றார். அவருடைய பேச்சில் இருந்த கனிவும், மக்கள் மீதான அக்கறையும், நாட்டு நடப்புகளில் இல்லை. மாறாக, ஜனநாயகம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அடாவடித்தனமான அடக்குமுறைகள் தலைவிரித்து ஆடின. குறிப்பாக, இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி மற்றும் ஹரியானாவில் முதலமைச்சராக இருந்த பன்சிலால் உள்ளிட்ட அவரது நண்பர்களின் அத்துமீறல்கள் அளவை மிஞ்சின. தில்லியில் ஆயிரக்கணக்கான குடிசைகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன.
தேடப்பட்ட தலைவர்கள் கிடைக்கவில்லையென்றால், அவர் குடும்பத்தினர் காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். ஜார்ஜ் பெர்னாண்டஸின் தம்பியும் அப்படிச் சித்திரவதைக்கு உள்ளானவர்களில் ஒருவர்.
கேரளாவில் ராஜன் என்னும் கல்லூரி மாணவர் கதை மிகக் கொடுமையானது. காவல்துறை அழைத்துக்கொண்டு சென்ற தன் பிள்ளையைத் தேடி அவரது தந்தை நடையாய் நடந்தார். ராஜனை விடுவித்து விட்டோம் என்று சொல்லி விட்டனர். ஆனால் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. காணாமல் போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டார். இறுதியில், நெருக்கடி நிலைக் காலம் எல்லாம் முடிந்தபின்பே அவர் இறந்துபோன செய்தி தெரிய வந்தது.
இவ்வாறு இந்தியாவே துயரத்தில் ஆழ்ந்திருந்தபோது, தமிழ்நாட்டை மட்டும் நெருக்கடி நிலை நெருங்கவில்லை. அதற்குக் காரணம், இங்கு திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்ததுதான். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் அதனைக் கண்டித்துத் திமுக தீர்மானம் நிறைவேற்றியது. இந்தியாவிலேயே, நெருக்கடி நிலைக்கு எதிரான முதல் தீர்மானம் அதுதான்! அந்தத் தீர்மானம் –
“உலகத்தின் மிகப் புகழ் வாய்ந்த மாபெரும் ஜனநாயக நாடாக கருதப்பட்டு வந்த இந்தியத் திருநாட்டில், அண்மைக்காலமாக ஆளும் காங்கிரசார் கடைப்பிடிக்கும் போக்கும், காரியங்களும் ஜனநாயக ஒளியை அறவே அழித்து, நாட்டைச் சர்வாதிகாரப் பேரிருளில் ஆழ்த்தும் வண்ணம் அமைந்துவருவது கண்டு தி மு கழகச் செயற்குழு தனது வேதனையைத் தெரிவித்துக் கொள்கிறது.”

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, ஜூலை 4 ஆம் தேதி, கலைஞரும், நாவலரும் பெருந்தலைவர் காமராஜரை நேரில் சென்று பார்த்துள்ளனர். நெருக்கடி நிலையை அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்றும், பதவியிலிருந்து விலகி வருவதற்கும் தாயாராக உள்ளோம் என்றும் இருவரும் காமராஜரிடம் கூறியுள்ளனர். ‘தேசம் போச்சு, தேசம் போச்சு’ என்று கூறி வருந்தியுள்ள அவர், எக்காரணம் கொண்டும் ஆட்சியைக் கலைத்துவிட வேண்டாம் என்றும் அறிவுரை கூறியுள்ளார். ‘தமிழ்நாட்டிலாவது ஜனநாயகம் மிஞ்சட்டும் என்று சொல்லியுள்ளார்.
காமராஜர் தன்னிடமும் கூறி வருந்தினார் என்று சஞ்சீவ ரெட்டியும் பிறகு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். ஆனால் அதற்குப் பிறகு நீண்ட நாள்கள் காமராஜர் உயிர் வாழவில்லை. அதே ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி இறந்துபோய்விட்டார் என்பதை நாம் அறிவோம்!
தலைமறைவாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு அடைக்கலம் கொடுத்ததோடு, தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட மாநாட்டிலும், திமுக, நெருக்கடி நிலையை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டே இருந்தது. இறுதியில், 1975 டிசம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெற்ற மாநில மாநாட்டில், திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர், இந்திரா காந்தியை மிகவும் கடுமையாகத் தாக்கிப் பேசிவிட்டனர்.
இந்தச் செய்திகள் தில்லியை எட்டின. பம்பாய் சிவாஜி பூங்காவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் பரூவா, “இந்திரா காந்தி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடை செய்து விட்டார். தமிழ்நாட்டில் உள்ள திமுக வினர் அதிகம் பேசுகின்றனர். அவர்களுக்கும் அதே நிலை ஏற்படலாம்” என்று பேசினார்.
மணியோசை வந்தது முன்னே, யானை வந்தது பின்னே!
தமிழ்நாட்டிற்குள் நெருக்கடி நிலை எப்போது எப்படி வந்தது, அதன் விளைவுகள் என்ன. அதனைத் தமிழகம் எவ்வாறு எதிர்கொண்டது என்பனவற்றை அடுத்த வாரம் பார்க்கலாம்.
(களங்கள்  தொடரும்)

அன்புடன்
சுப.வீரபாண்டியன்
பயன்பட்ட நூல்கள்
==================
பயன் பட்ட நூல்களின் விவரம், அடுத்த வார இறுதியில் தரப்படும்
Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.