1956ஆம் ஆண்டு, ஒரு கோரிக்கையை முன்வைத்து, அதற்காக 2 மாதங்களுக்கும் மேலாகப் பட்டினிப் போர் நடத்தி இறுதிவரையில் பின்வாங்காமல் அதில் உறுதியாக நின்று, தன் உயிரையே அதற்கு விலையாகக் கொடுத்தார் விருதுநகரில் பிறந்த ஒரு தியாகி. அவர் பெயர் சங்கரலிங்கனார். அவர் முன்வைத்த 24 கோரிக்கைகளுள் முதன்மையானதும், தலைமையானதும் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்னும் பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்ற வேண்டும் என்பதே!

தனிமனிதப் போராட்டம் என்றாலும், தமிழ் இனத்தின் வேட்கையை வெளிப்படுத்திய போராட்டம் என்பதால், அன்றைய சூழலில் தமிழகம் முழுவதும் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போராட்டம் அது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, பிறகட்சிகள், பொதுமக்கள் என அனைவரின் கவனத்தையும் அப்போராட்டம் தன்பால் ஈர்த்தது. உயிரைப் பணயம் வைத்துப் போராடியும், இறுதி வெற்றி அப்போது கிடைக்கவில்லை. ஆனாலும், அவர் தியாகம் வீணாகிவிடவில்லை. 22 ஆண்டுகளுக்குப் பிறகு, வெற்றி பெற்றது. அறிஞர் அண்ணா முதலமைச்சராக வந்தபிறகு, மெட்ராஸ் ஸ்டேட் என்பது மாற்றப்பட்டு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்தப் பெயர் மாற்றப் போராட்டம் மட்டுமின்றி, வேறு இரு பெரிய போராட்டங்களும், அதே ஆண்டில் நடைபெற்றன. ஒன்று, மொழி வாரி மாநிலங்கள் பிரிப்பது பற்றியது. இரண்டு, மாநிலங்களுக்கான எல்லைகளை முடிவு செய்வது. இவ்விரு போராட்டங்களும், இந்தியா முழுவதும் நடந்த போராட்டங்கள் ஆகும். தமிழகத்திலும், அவை வீரியத்தோடு நடைபெற்றன.

தமிழ்நாடு பெயர்மாற்றக் கோரிக்கை, 1955ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. அதற்கும் மொழிவாரி மாநிலங்கள் பிரிவினைக்கும் இடையில் ஒரு நெருக்கமான தொடர்பு இருந்தது. மொழி அடிப்டையில், 1953ஆம் ஆண்டே, சென்னை ராஜதானியிலிருந்து(Madras presidency) ஆந்திரா பிரிந்து போய்விட்டது. அப்போதே மற்ற மாநிலங்களும் பிரிக்கப்பட்டுவிடும் என்னும் எண்ணம் பரவலாக உருவாகிவிட்டது. அதன் அடிப்படையில், 1955ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே, ‘இனியாவது மெட்ராஸ் ஸ்டேட் என்னும் பெயரை விட்டுவிட்டுத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கூடாதா?’ என்ற வினாவைத் தந்தை பெரியார் எழுப்பினார். தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதில் என்ன தயக்கம்? உடனடியாக அதனைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியவர் தந்தை பெரியார்தான்.

1956 சனவரி 21ஆம் நாள் பெரியார் விடுத்த அறிக்கையிலும், இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். சி.பா.ஆதித்தனார், ம.பொ.சி. ஆகியோரும் அந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

24.11.1955 அன்று சென்னை மாநிலச் சட்டமன்றத்திலேயே, தமிழ்நாடு பெயர் மாற்றத்தீர்மானம் ஓர் உறுப்பினரால் முன்மொழியப்பட்டது. ஆனால், அன்று நிதியமைச்சராக இருந்த ஆர்.வெங்கட்ராமன், சர்வதேச அளவில் மெட்ராஸ் ஸ்டேட் என்னும் பெயர் அறியப்பட்டுள்ள ஒன்று என்பதால் அதனை மாற்ற வேண்டிய தேவையில்லை என்று கூறினார். பிறகு, அத்தீர்மானம் விவாதத்திற்கே எடுத்துக் கொள்ளப்படாமல், தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

விருதுநகரில் பிறந்த காங்கிரஸ் தியாகியான சங்கரலிங்கனார், இதனை முதல் கோரிக்கையாகக் கொண்டு 27.07.1956இல், விருதுநகர், மாரியம்மன் திடலில் தன் பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினார்.

சங்கரலிங்கனார் 1895ஆம் ஆண்டு பிறந்தவர். 1914ஆம் ஆண்டு, சுவாமி திருவாலவாயர் தொடங்கிய, ‘பங்கஜ விலாச வித்யாபிவிர்த்தி சங்கம்’ என்னும் பெண்களுக்கான கல்வி மேம்பாட்டு அமைப்பில் செயலாளராகப் பணியாற்றியவர். 1926 முதல் கதர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில் விருதுநகருக்கு வந்த காந்தியாரை வரவேற்று விருந்தளித்தவர். 1930இல் காந்தியார் நடத்திய உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்றுத் தண்டனையும் பெற்றவர். ராஜாஜிக்கு நெருக்கமான நண்பராக இருந்தவர். 1944ஆம் ஆண்டு தன் ஒரே மகனான வடிவேல் முருகன் 22 வயதில் மரணமடைந்த போது, விரக்தியுற்றுத் தன் வீட்டினை அங்கிருந்த விருதுநகர் சத்ரியப் பெண்கள் பாடசாலைக்குத் தானமாக எழுதிக் கொடுத்துவிட்டுத் தனக்கென ஏதும் வேண்டாமென்ற மனநிலைக்கு வந்துவிட்டவர். இவ்வாறு இயல்பாகவே போர்க்குணமும், தியாக உணர்வும் கொண்ட சங்கரலிங்கனார், எவ்விதச் சமரசத்திற்கும் இடமின்றி, தன் பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினார்.

அரசாங்கம் அவருக்குச் சமாதானம் சொல்லிப் பார்த்தது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காமராசர், தி.மு. கழகத்தின் தலைவர் அண்ணா, தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி., பொதுவுடைமைக் கட்சிகத் தலைவர்கள் அனைவரும் பட்டினிப் போராட்டத்தைக் கைவிடுமாறு அவரைக் கேட்டுக் கொண்டனர். ‘உயிர் பெரிதன்று, மானமே பெரிது’ என்று விடை சொன்ன சங்கரலிங்கனார், தன் போராட்டத்திலிருந்து ஓர் அங்குலமும் பின்வாங்கவில்லை.

போராட்டம் தொடங்கி, ஏறத்தாழ 60 நாள்கள் ஆன தருணத்தில், ஓர் இரவில் அறிஞர் அண்ணா, என்.வி.நடராசன், மதுரை முத்து ஆகியோர் அவரை நேரில் சென்று சந்தித்தனர். சங்கரலிங்கனார் மறைவுக்குப் பிறகு, அவர் குறித்து அண்ணா தன் கட்டுரை ஒன்றில், ”அவரை நான் கண்டேன். எனினும், அவர் இறந்துபட நேரிடும் என்று எண்ணவில்லை. காரணம், நானொரு ஏமாளி. நாடு அவரை அந்த நிலை வரை செல்லவிடாது, நாடாள்வோர் அவரைக் கைவிடமாட்டார்கள், அந்த அளவு கேவலத்தன்மை நாட்டைப் பிடித்துக் கொண்டு இல்லை… பழி பாவத்திற்கு அஞ்சியேனும், பிற்காலத்திற்குப் பயந்தேனும், அறிவுலகம் ஏசுமே என்று எண்ணியேனும், அவர் சாவதைத் தவிர்த்து விடுவதற்கான தக்க முறையினை மேற்கொள்வர் என்று என் பேதை நெஞ்சு எண்ணிற்று! பெருநெருப்பு கிளம்பிற்று, அந்தோ, அந்த வீரத் தியாகியை அழைத்துக் கொண்டது – சங்கரலிங்கனார் நம்மைவிட்டுப் பிரிந்தார்” என்று எழுதுகின்றார்.

 

ஆம், தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காகச் சங்கரலிங்கனார் தன் உயிரையே கொடுத்துவிட்டார். அக்டோபர் 10ஆம் தேதி, அவர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், கட்டாயப்படுத்தி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கும், சிகிச்சை எதுவும் எடுத்துக் கொள்ள அவர் மறுத்து, 13.10.1956 அன்று இறந்து போனார்.

அதற்குப்பிறகும், அப்போராட்டம் தொடரவே செய்தது. தமிழரசுக் கழகம், அதனை ஒரு போராட்டமாகவே முன்னெடுத்தது. 1960 டிசம்பர் மாதம், சென்னை கோகலே மண்டபத்தில், ம.பொ.சி. தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், போராட்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புகழ்பெற்ற நாடக நடிகர், அவ்வை சண்முகம் உட்படப் பலரும் கைதாகிச் சிறை சென்றனர். 1963ஆம் ஆண்டு, ஜூன் மாதம், பிரதமர் நேருவே இதுகுறித்து ம.பொ.சி.க்கு ஒரு விடை மடல் எழுதியதாக, ம.பொ.சி. நடத்திய ‘செங்கோல்’ ஏட்டில் ஒரு செய்தி உள்ளது. அதனைச் சுந்தரராசன், தன் நூலில் மேற்கோளாகக் காட்டியுள்ளார். ”பெயர் மாற்றம் பற்றித் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு, சென்னை மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் மட்டுமே உரியது” என்று அவர் (நேரு) விடை அமைந்திருந்தது.(”செங்கோல்” – 12.06.1963) என்கிறார் ம.பொ .சி.

சென்னை சட்டமன்றம், டெல்லி நாடாளுமன்றம் ஆகிய இரண்டிலும் இந்தப் பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 19.08.1960 அன்று, பிரஜா சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.எஸ்.சின்னசாமி அத்தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதனை ஆதரித்துப் பேராசிரியர் அன்பழகன், ப.உ.சண்முகம் ஆகியோர் பேசினர். எனினும், அன்றைய நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம், ‘தமிழகத்திற்குள்ளான கடிதப் போக்குவரத்துகளில் மட்டும் வேண்டுமானால், மெட்ராஸ் ஸ்டேட் என்பதற்குப் பதிலாகத் தமிழ்நாடு என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். அதற்குமேல் எதுவும் செய்ய இயலாது’ என்று கூறிவிட்டார். அரசின் முடிவை எதிர்த்து, நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் எதிர்க்கட்சியினர் வெளிநடப்புச் செய்தனர்.

இந்திய நாடாளுமன்றத்திலும் இதுபோன்ற ஒரு தீர்மானம், பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் குப்தாவினால் கொண்டவரப்பட்டது. அதனை ஆதரித்து, 24.09.1963 அன்று அண்ணா ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புடையது. அவர் உரையின் நடுவே, தமிழ்நாட்டைச் சார்ந்த காங்கிரஸ் கட்சியினர் சிலர் குறுக்கிட்ட போது, ‘இங்கும் நீங்கள் காங்கிரஸ்காரர்களாய்ப் பேச வேண்டியதில்லை. தமிழர்களாய் நாம் ஒன்று சேர்வோம்’ என்றார் அண்ணா.

1967 மார்ச் மாதம், தி.மு.கழகம், தமிழக ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. பதவியேற்ற சில மாதங்களிலேயே இப்பெயர் மாற்றத் தீர்மானத்தை, முதலமைச்சர் அண்ணா முன்மொழிந்தார். 18.07.1967 அன்று தீர்மானத்தை முன்மொழிந்து, அண்ணா ஆற்றிய உரையிலிருந்து சில வரிகளை நாம் பார்க்கலாம். ”இது தி.மு.கழகத்தின் வெற்றியில்லை, தமிழரசு கழகத்தின் வெற்றியில்லை, மற்ற கட்சிகளின் வெற்றியில்லை. இது தமிழுக்கு வெற்றி, தமிழருக்கு வெற்றி, தமிழ் வரலாற்றுக்கு வெற்றி, தமிழ்நாட்டுக்கே வெற்றி என்றவிதத்தில், அனைவரும் இந்த வெற்றியிலே பங்கு கொள்ள வேண்டும்.” இவ்வாறு உரையாற்றிய அண்ணா அவர்கள் சங்கரலிங்கனாரை நினைவு கூர்ந்து, இதற்காகத் தன்னைத்தானே தியாகம் செய்து கொண்ட சங்கரலிங்கனார் அவர்களுக்கு நினைவுச்சின்னம் எழுப்ப வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அத்தனை பேரும் கருத்திலே கொள்வோம் என்று கூறினார்.

இறுதியாக முதலமைச்சர் அண்ணா, ”தமிழ்நாடு” என்று குரல் கொடுக்க, அனைவரும் ”வாழ்க, வாழ்க” என்று முழக்கமிட்டார்கள்.

இவ்வாறாக, தமிழ்நாடு பெயர் மாற்றம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. எனினும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலும், குடியரசுத் தலைவரின் கையொப்பமும் கிடைப்பதற்கு ஓராண்டு ஆகிவிட்டது. 23.11.1968இல்தான் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. அதனையொட்டி, 1968 டிசம்பர் முதல் நாள், தமிழ்நாடெங்கும், பெயர் மாற்ற வெற்றிவிழா நடைபெற்றது. சென்னை, பாலர் அரங்கில் (கலைவாணர் அரங்கம்) அறிஞர் அண்ணா கலந்து கொண்டு உரையாற்றினார். அமெரிக்காவிலிருந்து சிகிச்சை பெற்றுத் திரும்பிய பிறகு அவர் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி அதுதான். அவ்விழாவில் பேசும்போது, ”நான் இந்த விழாவில் அதிகநேரம் பேசினால், என் உடலுக்கு ஊறு நேரிடும் என்று மருத்துவர்களும், நண்பர்களும் சொன்னார்கள். ஆனால், அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை… இங்கு நான் பேசுவதால், இந்த உடலுக்கு ஊறு நேரிடும் என்றால், இந்த உடல் இருந்தே பயனில்லை” என்று உருக்கமாகத் தன் கருத்தை வெளியிட்டார்.

எனினும் அதே காலத்தில் நடைபெற்ற மொழிவாரி மாநிலப் பகுப்பும், அதனையொட்டி நடைபெற்ற எல்லைப் போராட்டங்களும் விரிவாகப் பார்க்கப்பட வேண்டியவை.

இந்தியா விடுதலை பெற்ற நாளிலிருந்தே, மொழிவாரி மாநிலக் கோரிக்கை எழத் தொடங்கியிருந்தது. அதற்காகவே, அடுத்தடுத்து மூன்று குழுக்களை மத்திய அரசு நியமித்தது. இறுதியாக நியமிக்கப்பட்ட மூன்றாவது குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்தான், இந்தியா மொழி வாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அதற்கு ஆதரவும், எதிர்ப்பும் நிறையவே இருந்தன. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருவேறு கருத்துகள் நிலவின. எல்லாவற்றையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்றாலும், இந்தியா விடுதலை பெற்ற காலத்தில், சட்ட அமைச்சராகவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவின் தலைவராகவும் இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கருத்துகளை நாம் கவனத்தில் கொண்டே ஆக வேண்டும்.

மொழிவாரி மாநிலப் பிரிவினை உறுதியாகிவிட்ட காலகட்டத்தில், அதுகுறித்த தன் கருத்தை அம்பேத்கர் பதிவு செய்தார்(thoughts on linguistics states). மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதால், ஒவ்வொரு தேசிய இனத்தின் மொழி, பண்பாடு ஆகியன மேம்பாடு அடையும் என்பதை அம்பேத்கர் ஏற்றுக் கொண்ட போதிலும், பிற்காலத்தில் அது தேசத்தின் பிரிவினைக்கு வழிவகுத்துவிடும் என்று அஞ்சினார். தேசிய உணர்வு வளர வளர அது தேசப் பிரிவினைக்கே கொண்டு செல்லும் என்றும் கூறிய அவர், அதற்கு எடுத்துக்காட்டாகச் சில மேலைநாடுகளையும் சுட்டிக் காட்டினார்.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டாலும், ஒரு நிபந்தனையை அவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். எந்தவொரு மாநிலத்திலும், அந்த மாநிலத்தின் மொழி அலுவல் மொழியாக அல்லாமல், இந்தியே அலுவல் மொழியாக நீடிக்க வேண்டும் என்றும், இந்தி மொழி இந்திய மக்கள் அனைவராலும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படும்வரை ஆங்கிலம் அந்த இடத்தை நிரப்பலாம் என்றும் கூறினார்(“The official language of the state shall be Hindi and until India becomes fit for the purpose, English. Will Indians accept this? If they do not, linguistic states may easily become a peril”).

”ஒரு மொழி என்றால், அது தேசத்தை இணைக்கும், இரு மொழிகள், கண்டிப்பாக தேசத்தைப் பிளவுபடுத்திவிடும்”(One language can unite people. Two languages are, sure, to divide people) என்பதும் அம்பேத்கரின் நம்பிக்கையாக இருந்தது. சமூகநீதிக் கோட்பாடுகளில் முழுக்க முழுக்க அம்பேத்கரின் கருத்துகளை ஏற்கும் நம்மைப் போன்றவர்களால்கூட, அலுவல் மொழி சார்ந்த அவருடைய இக்கருத்தை ஏற்க இயலவில்லை. எனினும், அம்பேத்கரின் உள்மனம் நமக்குப் புரிகிறது.

அம்பேத்கரைப் பொறுத்த வரையில், மொழிமுரணைக் காட்டிலும், சாதிய முரணே மிகக் கூர்மையானதும், முதலில் ஒழிக்கப்பட வேண்டியதுமாகும். அவர் எந்தவொரு மொழியின் தனித்துவத்தையும், பெருமையையும் குறைத்து மதிப்பிடவில்லை. குறிப்பாக தமிழ்மொழியின் தொன்மையை, சிறப்பை அவர் நன்றாகவே அறிந்திருந்தார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு காலத்தில் பேசப்பட்ட மொழி தமிழே என்றார். அதே போல ஒவ்வொருவரின் தாய்மொழிக்கும் உரிய இடம் எது என்பதில் அவருக்கு எந்தக் குழப்பமும் இல்லை. அதனால்தான், அவர் நடத்திய மூக்நாயக், ஜனதா, பகீஷ்கரித் பாரத் ஆகிய ஏடுகள் அனைத்தையும் அவர் தன் தாய்மொழியான மராத்தியில்தான் நடத்திவந்தார். இந்தியிலோ, ஆங்கிலத்திலோ இல்லை.

ஆனாலும், மத்திய மற்றும் மாநிலங்களில் அலுவல் மொழியாக ஒரேயொரு மொழிதான் இருக்க வேண்டும் என்று அவர் கருதியதற்கு, நாடு பிரிந்துவிடக் கூடாது என்பதே நோக்கமாக இருந்திருக்கும். ஒட்டுமொத்த இந்தியாவிற்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய ஒருவர், அது உடைந்துவிடக் கூடாது என்று விரும்புவது இயற்கைதான். ஆனால், இன்றைய சமூக, அரசியல் சூழல்கள் முற்றிலுமாக மாறியுள்ளன. ஒவ்வொரு தேசிய இனத்திலும் ஒரு விழிப்புணர்வு வந்து கொண்டிருப்பதை இன்று நாம் பார்க்கிறோம். இன்றைய சூழலில் ‘ஒரு நாடு, ஒரு மொழி’ என்னும் கோட்பாடுதான் நாட்டின் ஒற்றுமையைக் குலைத்துவிடும் என்பது எதார்த்தம்.

அம்பேத்கரைப் போல, வேறு தலைவர்கள் சிலருக்கும் அதே மாதிரியான கருத்துகள் இருந்தன. எல்லாவற்றையும் மீறி, 1956 நவம்பர் ஒன்றாம் தேதி, இந்திய பல்வேறு மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. ஆனால், எல்லைகளைப் பிரித்துக் கொள்வதில், ஒவ்வொரு அண்டை மாநிலத்திற்கும் இடையில் மோதல்கள் எழுந்தன. தமிழ்நாட்டைப் பொறுத்த அளவு, கிழக்கில் கடல் என்பதால் சிக்கல் இல்லை. மேற்கு எல்லையில் சிறிய அளவில் சிக்கல் எழுந்தது. வடக்கிலும், தெற்கிலும் பெரும் எல்லைப் போராட்டங்கள் வெடித்தன.

தமிழ்நாட்டின் தெற்கு எல்லைப் பகுதியில் இருந்த திருவிதாங்கூர், 67 லட்சம் மக்களைக் கொண்ட மிகப் பெரிய சமஸ்தானம் ஆகும். அந்த சமஸ்தானத்தில், கூடுதல் எண்ணிக்ககையில் தமிழர்கள் வாழ்ந்த, தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றங்கரை, நெடுமங்காடு, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு, ஆகியன யாருக்குச் சொந்தம் என்னும் போராட்டம், தமிழ்நாட்டிற்கும், கேரளாவிற்கும் இடையே எழுந்தது. அவற்றைத் தமிழ்நாட்டில் சேர்ப்பதற்காக, மார்ஷல் நேசமணி, தியாகிமணி ஆகியோர் கடுமையாகப் போராடினர். தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி, வடக்கு, தெற்கு எல்லைகளைக் காப்பாற்றத் தொடர்ந்து போராடினார்.

இறுதியில், செங்கோட்டை போன்ற ஒரு சில பகுதிகள் மட்டுமே தமிழகத்திற்கு வந்து சேர்ந்தன. பெரும்பகுதியான நிலப்பரப்பை கேரளம் எடுத்துக் கொண்டுவிட்டது. குறிப்பாக தேவிகுளம், பீர்மேடு எல்லைப் போராட்டம் சற்றுப் பெரியதாகவே நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில், பெரியாரையும், காமராசரையும் குறை கூறுவோர் இன்றும் உள்ளனர். தெற்கு எல்லை மீட்புக் குழுவினர், அன்று முதலமைச்ராக இருந்த காமராசரை நேரில் சென்று சந்தித்து, தேவிகுளம், பீர்மேட்டைத் தமிழ்நாட்டிற்குப் பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும், அதற்குக் காமராசர், ‘குளமாவது, மேடாவது, எல்லாம் இந்தியாவில தானே இருக்குங்குறேன்’ என்று சொல்லிவிட்டதாகவும், ம.பொ.சி. குறிப்பிடுகிறார்.

அதேபோல, பெரியார் மீதும் ஒரு குற்றச்சாற்றைத் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். தேவிகுளம், பீர்மேடு மீட்புப் போராட்டக்குழு நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் கூட பெரியார் கலந்து கொள்ளவில்லை, தமிழக நலனை அவர் புறக்கணித்துவிட்டார் என்பதே அந்தக் குற்றச்சாற்று. அது எவ்வளவு தவறானது என்பதை, 1956 சனவரி 21, 25, 26 ஆகிய நாள்களில் பெரியார் வெளியிட்ட அறிக்கைகளை எடுத்துக்காட்டி, அண்மையில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் விளக்கியுள்ளார்.

ம.பொ.சி.யுடன் நிறைய கருத்துவேறுபாடுகள் இருந்தபோதிலும், பெரியார் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார். போராட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டுவதென்று, இருவரும் சேர்ந்தே முடிவெடுத்துள்ளனர். அந்தக் கூட்டத்தில் சில குறிப்பிட்ட அதிகாரங்களைத் தவிர எஞ்சிய அனைத்தும் மாநிலங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும், சென்னை ராஜ்ஜியம் என்னும் பெயர் தமிழ்நாடு என்று மாற்றப்பட வேண்டும் என்றும், தேவிகுளம், பீர்மேடு ஆகியவை தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிக்கு உட்பட்டவை என அறிவிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானங்கள் இயற்றலாம் என இருவரும் பேசி முடிவு செய்தனர். கலந்துரையாடல் கூட்டத்திற்கான அழைப்பை, ம.பொ.சி., பெரியார், தொழிற்சங்கத் தலைவர் அந்தோணிப் பிள்ளை, திராவிடப் பார்லிமென்டரி கட்சித் தலைவர் சுயம்பிரகாசம், பொதுவுடைமைக்கட்சித் தலைவர்களில் ஒருவர் என ஐவர் கையொப்பமிட்டு அனுப்புவது எனவும் முடிவாயிற்று.

எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு சென்ற ம.பொ.சி., இறுதியில் வேறுவிதமாகச் செயல்பட்டார். அனைத்துக் கோரிக்கைகளையும் கைவிட்டுவிட்டு, பீர்மேடு, தேவிகுளத்தை மட்டுமே அழைப்பில் குறிப்பிட்டதோடு, அவர் ஒருவர் மட்டுமே கையொப்பமிட்டு அனைவருக்கும் கடிதங்களை அனுப்பி வைத்தார். அது கண்டு சினமுற்ற பெரியார், ”இது சிறுதும் நேர்மையற்ற காரியம் என்பது எனது கருத்து. இப்படிப்பட்டவர்களுடன் நான் எப்படி இவ்வளவு பெரிய காரியத்தில் கலந்து, மக்களையும் ஈடுபடச் செய்ய முடியும்? ஆதலால் அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை விசனத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அறிக்கைவிட்டார். ஆகவேதான், திராவிடர் கழகம் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

வடக்கு எல்லையிலும், போராட்டம் கடுமையாக நடைபெற்றது. வடக்கு எல்லைப் போராட்டத்தை, ராஜாஜியின் வழிகாட்டுதலோடு, ம.பொ.சி., மங்கலங்கிழார் ஆகியோர் முன்னின்று நடத்தினர். திருப்பதி, திருத்தணி, சென்னை ஆகிய எல்லா ஊர்களும் எங்களுக்கே சொந்தம் என்றனர் ஆந்திர மாநிலத்தவர். சித்தூர் மாவட்டத்தின் பெரும்பகுதியைக் கோரிய ஆந்திர அரசியல்வாதிகள், ‘மதராஸ் மனதே’ என்றும் முழக்கமிட்டனர்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே, 1953 ஜூன் மாதத்திலேயே திருத்தணி மீட்புப் போராட்டம் தொடங்கிவிட்டது. என்.ஏ.ரஷீத், கோவிந்தசாமி, திருவள்ளூர் பச்சையப்பன், கவிஞர் அருமைநாதன் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் பம்பாய் எக்ஸ்பிரஸ் ரயிலை மறியல் செய்து நிறுத்தினர். அப்போராட்டத்தில் ஈடுபட்ட கோல்டன் சுப்பிரமணியம், ரஷீத், மங்கலங்கிழார், கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுத் திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து நடந்த போராட்டங்களின் விளைவாக, சென்னை தமிழர்களுக்கு வந்து சேர்ந்தது. 1960ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், திருத்தணிகை வட்டம், தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. எனினும், திருப்பதி ஆந்திராவிற்குப் போய்விட்டது.

இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, 1956ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னுமாகச் சில ஆண்டுகள் நடைபெற்ற போராட்டங்களில், தமிழ்நாடு பெயர் மாற்றப் போராட்டமும், மொழிவாரி மாநிலப் பிரிவினைப் போராட்டமும் வெற்றி பெற்றன என்றாலும், எல்லைப் போராட்டத்தில், தமிழகம் பாதிக்கும் மேலான பகுதியை அண்டை மாநிலங்களிடம் இழந்துவிட்டது என்னும் உண்மையை மறுக்க இயலாது.

(களங்கள் தொடரும்)
அன்புடன்
சுப.வீரபாண்டியன்

பயன்பட்ட நூல்கள்
==================

1. சுந்தராசன், த. புலவர் – ”தமிழ்நாடு பெயர் மாற்ற வரலாறு” – வளனரசுப் பதிப்பகம், சென்னை – 33

2. சிவஞானம், ம.பொ., – ”எனது வாழ்க்கைப் போராட்டம்” – பூங்கொடி பதிப்பகம், சென்னை – 4

3. வீரபாண்டியன், சுப. – ”திராவிடத்தால் எழுந்தோம்” – வானவில் புத்தகாலயம், சென்னை – 17

4. வேள்நம்பி, கோ. (தொகு) – ”தமிழனை உயர்த்திய தலைமகன் உரைகள்” – சீதை பதிப்பகம், சென்னை – 4

5. Bhal chandra Mungekar (Ed.,) “The Essential Ambedkar” – Rupa publications, New delhi – 110002

Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.