திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக 50 ஆண்டுகள் ஒரு கட்சியை தலைமை ஏற்று நடத்திய வரலாறு கலைஞர் மு.கருணாநிதிக்கே உண்டு. அவர் ஐந்து முறை முதல்வராக பொறுப்பு வகித்துள்ளார்.
இந்திய சட்டமன்ற வரலாற்றில் 1952 தேர்தல் தவிர்த்து 13 தேர்தல்களில் கருணாநிதி போட்டியிட்டு எல்லா தேர்தலிலும் மாபெரும் வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளார்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருக்கமாக இருந்து, திராவிட கழகத்தின் தொடக்க காலத்தில் இருந்து உழைத்தவர் கருணாநிதி. எழுத்து, பேச்சு என்று இரண்டிலும் முத்திரை படைத்தவர்கள் சிலர்தான். அவர்களில் கலைஞர் குறிப்பிடத்தக்கவர்.
கடிதம், சிறுகதை,தொடர்கதை, நாவல், கட்டுரை என தமிழன்னைக்கு அலங்காரம் செய்தவர். குறளோவியம், தொல்காப்பியம் அணிந்துரை என பல நூல்களை எழுதியுள்ளார்.
கருணாநிதி உலகம் எங்கும் வாழும் தமிழக மக்களின் இதயத்தின் சிம்மாசனம் போட்டு இருப்பவர். உலக தலைவர்கள், தேசிய தலைவர்களால் மதிக்கப்படுபவர்.
14 வயதில் இருந்து பொது வாழ்வில் ஈடுபட்டு வருகிறார். சுமார் 40 ஆண்டுகள் அவருடன் நட்புடன் இருக்கிரேன். அவருடன் கூட்டணியில் இருந்த போதும் எதிர்த்து வேறு அணியில் இருந்த போதும் அவர் மீது எனக்கு மரியாதை அன்பு உண்டு.
நான் . அதிமுகவில் இருந்த காலகட்டத்தில் அவர் என்னுடைய திருமணத்தில் கலந்து கொண்டார். என் பிள்ளைகளின் திருமணங்களிலும் கலந்து கொண்டார்.
எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்துள்ளார். சட்டமன்றத்தில் நாங்கள் வைத்த கோரிக்கையை எல்லாம் நிறைவேற்றினார். தொகுதி வளர்ச்சி நிதியை உயர்த்தினார். எம்எல்ஈக்களின் அதிகாரத்தை கூட்டினார். இப்படி பல விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்” என்று திருநாவுக்கரசர் வாழ்த்தினார்.