சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள், பள்ளிக்கு மது போதையில் வந்த நிலையில், அதை தட்டிக் கேட்ட ஆசிரியர் மீது மது பாட்டிலால் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை மாணவர்கள் மது பாட்டிலால் தாக்கிய சம்பவம்  ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுபாட்டிலால் தாக்கப்பட்ட ஆசிரியர், அரசு மருத்துவமனையில்   சிகிச்சை பெற்று வரும் நிலையில், மதுபோதையில் பள்ளிக்கு வந்த நான்கு மாணவர்களை பிடித்து செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இச்சம்பவத்துடன் தொடர்புடைய 12ஆம் வகுப்பைச் சேர்ந்த 2 மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

திருத்தங்கல் மெயின் ரோட்டில் உள்ளது சி.ரா. அரசு மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (47) என்பவர் அரசியல் அறிவியல் துறை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இன்று மதியம் உணவு இடைவேளைக்கு பின் ஆசிரியர் சண்முக சுந்தரம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது 4 மாணவர்கள் வகுப்புக்கு தாமதமாக வந்துள்ளனர். அவர்களிடம் ஆசிரியர் சண்முக சுந்தரம் எங்கு சென்றீர்கள்? ஏன் வகுப்புக்கு தாமதமாக வந்தீர்கள்? என்று கேட்டுள்ளார். மாணவர்களிடம் விசாரிக்கும் போது அவர்கள் மீது மது வாடை வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் சண்முக சுந்தரம், மது அருந்தி விட்டு வகுப்பு வந்துள்ளதாக கூறி தலைமை ஆசிரியரிடம் வருமாறு 4 மாணவர்களையும் அழைத்துள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த மாணவர்களில் இருவர், தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து ஆசிரியர் சண்முக சுந்தரத்தை திடீரென தாக்கினார்.

இதில் ஆசிரியர் சண்முகசுந்தரத்திற்கு தலை மற்றும் காது பகுதிகளில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக வகுப்பில் இருந்த மற்ற மாணவர்கள் மற்றும் அருகில் இருந்த சக ஆசிரியர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியர் சண்முக சுந்தரத்தை திருத்தங்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், ஆசிரியர்கள் சிலர் 4 மாணவர்களையும் பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த திருத்தங்கல் காவல் நிலைய போலீசார், இந்த சம்பவம் குறித்து மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், பள்ளி கல்வித் துறை அதிகாரிகளும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் மீது மது போதையில் இருந்த மாணவர்கள் மது பாட்டிலால் தாக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனது  எக்ஸ் பதிவில், பள்ளிக் கல்வித்துறையின் தினசரி சாதனைகள் வரிசையில் இன்று, திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்கள் மது பாட்டிலால் ஆசிரியரைத் தாக்கி மண்டையை உடைத்திருக்கிறார்கள்.

மற்றொருபுறம், மதுராந்தகம் அருகே புதுப்பட்டு அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து, 5 மாணவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

பள்ளிக் கல்வித் துறையில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்க, உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரான பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ப வடிவில் இருக்கைகள் வைப்போம் என, பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கிக் கொண்டிருக்கிறார்.

சினிமா மோகத்தை விட்டுவிட்டு, எப்போதுதான் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிப்பீர்கள் அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்களே? என தெரிவித்துள்ளார்.