சிதம்பரம்: கூடுதல் கல்விக்கட்டணத்தை ரத்து செய்யக்கோரி 40நாட்களுக்கும் மேலாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணாக்கர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மாலை 4 மணிக்குள் மாணவர்கள் விடுதிகளை காலி செய்துவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு (2020) மார்ச் இறுதியில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியும் மூடப்பட்டதுரு. பின்னர் 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் கடந்த ஆண்டு இறுதியில் திறக்கப்பட்டது. ஆனால், இந்த மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தி வரும் நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கல்விக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை ரத்து செய்ய வலியுறுத்தியும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வசூலிக்கும் அதே கட்டணத் தொகையை வசூலிக்க வேண்டும் என மாணவர்கள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மறுதேதி குறிப்பிடாமல், காலவரையற்ற மூடப்படுவதாகவும், விடுதிகளையும் மூடுவதால், அங்கு தங்கியிருந்த மாணாக்கர்கள் மாலை 4 மணிக்குள் வெளியேற வேண்டும் என திடீரென அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மாணாக்கர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு தமிழக அரசு, தனிச் சட்டம் நிறைவேற்றி அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக உயர் கல்வித் துறையின் கீழ் நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.