புதுடெல்லி:
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பு, “அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷித் உறுப்பினர்கள் உணவு விடுதியில் அசைவ உணவுகளை வழங்க விடாமல் தடுத்து வன்முறைத் தாக்குதலில் ஈடுப்படனர். இதில் சில மாணவர்கள் காமடைந்துள்ளனர். ஏபிவிபியினர் விடுதி செயலாரையும் தாக்கியக்கி உள்ளனர். அவர்கள் இரவு உணவு மெனுவை மாற்றவும், அதில் அனைத்து மாணவர்களுக்கும் வழக்கமாக வழங்கப்படும் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மெஸ் கமிட்டியை வற்புறுத்தி தாக்கினர். ஜேஎன்யு மற்றும் அதன் விடுதிகள் அனைவருக்கும் பொதுவான இடமாகும். அது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் சொந்தமானது இல்லை” என்று குற்றம் சாட்டியுள்ளது.

இதனை எதிர்த்து ஏபிவிபி அமைப்பினர், “இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் விடுதியில் ஒரு பூஜை ஏற்பாடு செய்வதைத் தடுக்க முயன்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளது. சில சாதாரண மாணவர்கள், ராமநவமியை முன்னிட்டு மாலை 3.30 மணிக்கு காவிரி விடுதியில் பூஜை மற்றும் ஹவன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த பூஜையில் ஏராளமான ஜேஎன்யு மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கு இடதுசாரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பூஜையை நடத்தவிடாமல் தடுத்தனர். உணவு உரிமை விவகாரத்தில் பொய்யான சலசலப்பை உருவாக்கியுள்ளனர் என்று தெரிவித்தனர். இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கியதாகவும் மாணவர்களை காயப்படுத்தியதாகவும் மாறி மாறி குற்றம்சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து பல்கலை வளாகத்திற்கு போலீஸார் வரவழைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி மனோஜ் சி, “இங்கு ஒரு வன்முறை நடந்துள்ளது. தற்போது எந்த பிரச்சினையும் இல்லை. இங்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். இங்கு அமைதியை நிலைநாட்ட முயற்சிக்கிறோம். இந்த கலவரத்தில் இருதரப்பில் இருந்தும் 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.