திருச்சி : மாணவர்கள் விரும்பினால் மூன்றாவது மொழியை கற்கலாம்; ஆனால் கட்டாயப்படுத்தக்கூடாது என ஆளுநர் முன்னிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பேசினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகம் , டெல்லி தலைவர் (பொறுப்பு) கனகசபாபதி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சங்க காலத்தில் பெண் புலவர்கள் அதிக அளவு இருந்தனர். கலாச்சார படை யெடுப்பிற்குப் பின் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு எனக்கூறி பெண்களின் கல்வியை தடுத்துவிட்டனர். தற்பொழுது மீண்டும் பெண்கள் அதிக அளவில் படிக்க தொடங்கியுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் படித்து பட்டம் பெறுகின்றனர். சங்க காலம் மீண்டும் திரும்புகிறது. பெரியார் கண்ட கனவு நிறைவேறி வருகிறது.