மும்பை:
மாணவர்கள் யுவ குண்டு போன்றவர்கள், அவர்களிடம் மோத வேண்டாம் என்று மத்திய அரசுக்கு மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவுரை கூறி உள்ளார்.
மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மாபெரும் போராட்டம் எழுந்துள்ளது. அங்கு சாலைகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகமான ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக மாறி காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டத்தை கட்டுப்படுத்தினர். இந்த போராட்டத்தின்போது பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரி வித்து, பல மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில், ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு, மகாராஷ் டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஜாலியன்வாலா பாக் போன்றது என்றும், மாணவர்கள் ‘யுவ குண்டு’ போன்றவர்கள். எனவே, மத்திய அரசு அவர்களுடன் மோத வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
மேலும், வரும் 2022ம் ஆண்டு இந்தியா மிகப்பெரிய இளைஞர்களின் நாடாக இருக்கும். அதற்குள் இளைஞர் குண்டுகளை வெடிக்க முயற்சிக்காதீர்கள்” என்றும் மோடி அரசுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.