அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர், சிறப்பாக பாடம் நடத்தி, மாணவர்களிடம் அன்போடு பழகுவது, பள்ளியை பராமரிப்பது என்று அவ்வப்போது செய்திகள் வருவதைப் படித்திருப்பீர்கள்.
ஏழை மாணவர்கள் மீது பேரன்பு கொண்டு, அவர்களுக்கு முடிதிருத்தம் செய்யும் ஆசிரியரை தெரியுமா?
ஜெயகொண்டம் நகராட்சி பகுதியில் மேலகுடியிருப்பு நடு நிலை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் இரா. சேதுராமன்தான் அவர்.

சேதுராமன்..
சேதுராமன்..

இது குறித்து இன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவில், “விடுமுறை நாளான நேற்று  (சனிக்கிழமை –  3-9-20016) .காலை 9.45லிருந்து 1.45 வரை எங்கள் பள்ளியில் ஆறு மாணவர்களுக்கு தலைமுடி சீர்திருத்தம் செய்யப்பட்டது…(போலீஸ் கட்டிங்) அருகே பொது அறிவு புத்தகத்தை விருப்பத்துடன் படிக்கும் மாணவர்கள்…இவையெல்லாம் எனக்கு மிகுந்த மன நிறைவைத்தருகிறன” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மாணவர்களுக்கு முடிவெட்டுகிறார்..
மாணவர்களுக்கு முடிவெட்டுகிறார்..

சேதுராமனை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “எங்கள் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் மிகுந்த ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.  சிலர், தாய் தந்தையை இழந்தவர்கள். அவர்கள் நீண்ட முடியோடு வருவதைப் பார்த்து, அவர்களுக்கு முடிவெட்ட முடிவு செய்தேன்.  எனக்கு முடித்திருத்தம் செய்யும் நண்பரிடம் சொல்லி, 3600 ரூபாய் கொடுத்து முடிவெட்டும் மிசின் வாங்கினேன்.  கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இருவரை இரு நூறு முறைக்கும் மேல் மாணவர்களுக்கு முடிவெட்டியிருக்கிறேன்” என்றார் சேதுராமன்.
மாணவர்களுடன் மதிய உணவு..
மாணவர்களுடன் மதிய உணவு..

தினமும் மதிய உணவை தனது மாணவர்களுடன் சேர்ந்து சாப்பிடுகிறார் சேதுராமன். அது குறித்து கூறும்போது, “பள்ளியில் அளிக்கும் மதிய உணவை சுவை சரியில்லை என்று மாணவர்கள் நிறைய பேர் சாப்பிடாமல் இருப்பார்கள். அவர்களுக்காகவே அந்த உணவை வாங்கி கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, பிறகு எனது சாப்பாட்டை சாப்பிடுவேன். இப்போது அதிகமான மாணவர்கள் பள்ளி உணவை உண்கிறார்கள்” என்கிற சேதுராமன், “மாணவர்களு்ககாகவே 5 கிலோ ஊறுகாய் ஜார் வாங்கி வைத்திருக்கிறேன். அது உணவுக்கு கூடுதல் சுவையைக் கொடுக்கிறது” என்கிறார்.
மேலும் அவர், “தினமும் காலையில் எங்கள் பள்ளி துவங்கும் முன் வளாகத்தை துடைப்பம் கொண்டு கூட்டுவேன். மதிய உணவு உண்டபின் இடைவேளையில் மாணழர்களுக்கு ஆங்கில இலக்கண வகுப்பு தினமும் எடுக்கிறேன். மாணவர்களும் ஆர்வத்துடன் கற்கிறார்கள்” என்கிறார் உற்சாகமாக.
“குடும்பத்துடன் செலவழிக்க நேரமின்றி போகுமே” என்று கேட்டேன். அதற்கு அவர், ” என் குடும்பத்தாருக்கும் அந்த மனக்குறை உண்டு. விடுமுறை நாட்களை தங்களுடன் செலவழிக்க வேண்டும்யு என்பது   அவர்களது கோரிக்கை. ஆனால் என் ஏழை மாணவர்களுக்கு என்னை விட்டால் யார் கிடைப்பார்” என்கிறார் சேதுராமன்.
மாணவர்கள் மீதான தனது பேரன்பு குறித்து , “எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.. என்று சொல்வார்கள் அல்லவா. அவர்கள் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பில் மட்டுமல்ல.. ஆசிரயர் தரும் பயிற்சிலும் இருக்கிறது. ஆசிரியர் என்பவர் பாடப்பயிற்சி மட்டும் கொடுப்பவர் அல்ல. வாழ்க்கை பயிற்சியும்கூட” என்று சேதுராமன் கூறுவது அனைத்து ஆசிரியர்களுக்குமான பாடம்.
 
 
சேதுராமனுக்கு ஒரே ஒரு குறைதான்:
“மலைப்பகுதி மாணவர்கள் மிக பின் தங்கியிருப்பதாக படித்தேன். ஏதேனும் மலைப்பகுதிக்கு சேவை புரிய மாறுதலாகிச் செல்லலாம் என்று மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்தேன் ஆனால் கிடைக்கவில்லை..!”
 
பேட்டி: டி.வி.எஸ். சோமு