திருச்சி:  திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியின் வகுப்பறையில் ஆசிரியரை மாணவன் ஒருவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

புத்தகம் பிடிக்க வேண்டிய கைகளில் புகை வரும் சிகரெட்டும், அரிவாளும், போதை பொருளும், டாஸ்மாக் சரக்குகளும் காணப்படும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள இளைய தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.

கண்டிப்பாரின்றி வளரும், இளைய தலைமுறையினரின் இதுபோன்ற நடவடிக்கைகள் ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும். இல்லையேல் இலவசத்துக்கு அடிமையாகி போன தமிழக மக்களின் குழந்தைகளும் கூலிப்படையினராக மாறிவிடும் வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது.

தமிழ்நாட்டில் சமீப காலமாக போதைபொருள் நடமாட்டம் எங்கும் காணப்படுகிறது. அதுபோல கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் கஞ்சா சாக்லெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா போன்ற போதை பொருட்களும் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டிய காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதால், இதன்மூலம் பாலியல் மற்றும் கொலை சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் காலங்களிலேயே ரூட் தல என கூறிக்கொண்டு யார் பெரியவன் என்ற போட்டி காரணமாக ஒருவருக்கொருவர் வெட்டிக்கொல்லும் சம்பவங்களும், பேருந்துகளின்மீது ஏறி ஆட்டம் போடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இதை தடுக்க வேண்டிய காவல்துறையினரும், பெற்றோரும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், மக்கள் விரோத நடவடிக்கைகளில் இளையதலைமுறையினர் எந்தவித பயமுமின்றி ஈடுபட்டு வருகின்றனர்.

சமீப காலமாக பல்வேறு வசதிகள் மற்றும் இலவசங்களுக்கான பெரும்பாலான  பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை  அரசு பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். ஆனால் அந்த குழந்தைகள் பள்ளிகளில் எவ்வாறு படிக்கிறார்கள்? அவர்கள் தினமும் பள்ளிக்கு செல்கிறார்களா? என்பதை கண்காணிக்கும் பெற்றோர்கள் மிகவும் குறைவு. காலையில் வேலைக்கு சென்றவர்கள், மாலையில் வீடு திரும்புகிறார்கள். அதுபோல் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மாணவர்கள் தங்களின் உறவினர் யாரும் நம்மை கவனிப்பார்களோ என்ற பயம் எதுவும் இல்லாமல் சுற்றித்திரிகிறார்கள். இதை சாதகமாக்கிக்கொண்டு பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வு செய்யும் பாதை என்பது மிகவும் அபாயகரமானதாக மாறி வருகிறது.

பள்ளி என்றால் கல்வி கற்கும் இடம் மட்டுமல்ல. கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ளும் இடமாக ஒருகாலத்தில் பள்ளிக்கூடங்கள் இருந்தன. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளன. வெளியில் பழகும் தவறான பழக்கங்களை வெளிப்படுத்தும் இடமாக பள்ளிகள் மாறி உள்ளன. அந்த அளவிற்கு அரசு பள்ளி மாணவர்கள் சமீப காலமாக ஒழுக்கமின்மையாக நடந்து கொள்கின்றனர்.

கடந்த சில மாதங்களில் பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் வகுப்பறைகளிலேயே விளையாடுவது, ஆட்டம் போடுவது, மேசை, நாற்காலிகளை சேதப்படுத்துவது, கண்டிக்கும் ஆசிரியர்களை கேலி செய்து தாக்குவது உள்ளிட்ட ஏராளமான சம்பவங்களை நாம் காண முடிந்தது.

இதற்கு முக்கிய காரணம், அரசு, நீதிமன்றங்கள், மனித உரிமை ஆணையம் போன்றவையே.  தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை கண்டிக்கக்கூடாது, அடிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதால், மாணவர்களை ஒழுங்குபடுத்துவதில் ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், பெரும்பாலான அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தற்குறிகளாகவும், போதை அடிமைகளாகவும் மாறி வருகின்றனர்.  இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க அரசு  முறையான நடவடிக்கை எடுக்காததால் இன்று பல பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயந்து பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாகவே, தற்போது  அரசு பள்ளி ஆசிரியரை மாணவன் ஒருவன் அரிவாளைக்கொண்டு வெட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. இது தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. 

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் அரசு ஆண்கள் உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள பயின்று வருகின்றனர். கடைசி நேர பாட வகுப்பை 12 ஆம் வகுப்பு வணிகவியல் ஆசிரியர் சிவகுமார் எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென ஒரு மாணவர் முகக்கவசம் அணிந்து வகுப்பறைக்கு உள்ளே வந்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு, அங்கிருந்த ஒரு மாணவரை வெட்டி உள்ளார்.

இதனை தடுக்கச் சென்ற ஆசிரியர் தலையிலும் மாணவன் வெட்டிவிட்டு தப்பி ஓடிச் சென்றான். இதில், காயமடைந்த ஆசிரியர் மற்றும் மாணவரை சக மாணவர்கள் மீட்டு அருகில் உள்ள ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த ஸ்ரீரங்கம் போலீசார் வெட்டுப்பட்ட மாணவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், ஏற்கனவே இரு மாணவர்களுக்கும் இடையே மூன்று மாதங்களாக முன்பகை இருப்பதாக தெரிகிறது. மேலும், கடந்த வாரத்தில் இருவருக்கும் இன்ஸ்டாகிரா மில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே, இன்று ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் தமிழ்செல்வன் வெட்டுப்பட்ட மாணவர் மற்றும் ஆசிரியரை நேரில் சந்தித்து விசாரித்தார். மேலும், வெட்டிய மாணவனின் தந்தையை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து காயமடைந்த ஆசிரியர் கூறுகையில், “நான் கடைசி நேர பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது மாஸ்க் அணிந்த மாணவன் வந்து வகுப்பறையில் இருந்த மாணவர் ஒருவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றான். தடுக்கச் சென்ற என்னையும் வெட்டிவிட்டான். இதற்கு முன்பாக இந்த மாதிரி சம்பவம் நடைபெறவில்லை. ஆசிரியர் தாக்கப்படுவது இதுதான் முதல் முறை என்று கூறியுள்ளனர்.

ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் சென்னையில் பலமுறை அரங்கேறி உள்ளது. மாணவனை கண்டித்த ஆசிரியை மாணவனின் பெற்றோர் அடித்து உதைத்த சம்பவமும், மாணவனை கண்டித்த ஆசிரியரின் இருசக்கர வாகனத்தின் டயர்கள் வெட்டப்படுவதும், வாகனங்களை சேதப்படுத்தும் சம்பவங்களும், பல ஆசிரியர்கள் பகிரங்கமாக மிரட்டப்படும் சம்பவங்களும் அரங்கேறிக்கொண்டுத்தான் இருக்கின்றன.

குறிப்பாக மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி வருவதும்,  தடம் மாறி செல்லும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தால் ஏதாவது ஒரு பிரச்சினையை உருவாக்கி, ஆசிரியர்கள் தவறு செய்வதுபோன்று சித்தரித்து விடுகின்றனர். இதற்கு பயந்து ஆசிரியர்கள், படித்தால் படி படிக்காவிட்டால் போ, எங்களுக்கு என்ன என்று தங்களது பணியை மட்டும் செய்யும்  மனநிலைக்கு வந்து விட்டனர்.

இளைய தலைமுறையினரை ஒழுங்க படுத்த வேண்டிய ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டு உள்ளதால், இளைய தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.  இதன் எதிரொலியாக படிக்கும் வயதில் மாணவர்கள் கைகளில் போதை பொருளும், அரிவாள் போன்ற ஆயுதங்களும் புழங்கி வருகின்றன.

இலவசங்களுக்கு அடிமையாகி போன  தமிழனின் குழந்தைகளுக்கு தற்போது பள்ளியில் இருவேலை இலவச உணவு கிடைப்பதால், தங்களது குழந்தைகள் மீது அக்கறையின்மை இல்லாத நிலை உருவாகி உள்ளது. மேலும் உயர்கல்வி மற்றும் கல்லூரி கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் அரசின் உதவித்தொகை கிடைப்பதால், அவர்களும் பெற்றோர்களை எதிர்நோக்க வேண்டிய அவசியமின்மை ஏற்பட்டுள்ளது.  அரசின் வாக்குவங்கி நடவடிக்கைகளால்,   சமீப காலமாக  மாணவ மாணவிகளின் நடவடிக்கைகள்  ஊதாரித்தனமாக மாறி வருகிறது.  இதற்கு ஒரு வகையில் அரசும் காரணம் என்பதே உண்மை.

அரசின் வழிகாட்டுதலின் பேரில், பெற்றோர், ஆசிரியர்கள், காவல்துறை இணைந்து மாணவர்களின் இன்றைய நிலையை அறிந்து அவர்களை சரியான முறையில் வழிநடத்தி, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி  போதை பொருட்களின் பிடியில் இருந்து மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்பெ சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.