சென்னை:

கே.கே.நகர் கல்லூரி வாசலில் முன்னாள் காதலனால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட  மாணவி அஸ்வினியின் உடலை போலீசாரின் உறுதிமொழியை தொடர்ந்து அவரது  உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

தமிழகத்தை உலுக்கிய சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி கொலையில் அவரது காதலன்  அழகேசன் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், தான் ஏற்கனவே அஸ்வினையை திருமணம் செய்து கொண்டதாகவும், அஸ்வினியின் தாயாரால்தான் அஸ்வினி தன்னை வெறுத்ததாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அஸ்வினியின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அவரது உடனை வாங்கிச் செல்லும்படி அவரது உறவினர்களிடம் போலீசார் கூறினார்.

ஆனால், அவரது உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் போராட்டம் செய்தனர். அழகேசனுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும் என போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அழகேசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கீழ்ப்பாக்கம் உதவி ஆணையரை அஸ்வினியின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

அஸ்வினி கொலைக்கு மதுரவாயல் காவல்துறையினர் தான் தகுந்த பதில் அளிக்க வேண்டும் என்றும், அஸ்வினிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியும் அவர்கள் பாதுகாப்பு அளிக்கவில்லை என்பதால் தான் இந்த துயரம் நடந்ததாகவும் அஸ்வினி உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதைத்தொடர்ந்து அஸ்வினி உறவினர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது அஸ்வினியின் கொலையாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என அவர்கள் உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து, அஸ்வினியின் உடலை பெற்றுக்கொண்டனர்.