சென்னை: சென்னையில் ரசாயனம் கலந்த தர்பூசணி பழங்கள் எங்கேயும் இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்படாமல் தர்பூசணிகளை வாங்கி சாப்பிடலாம் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தர்பூசணியில் ரசாயணம் கலந்து விற்பனை செய்வதாக வீடியோ வெளியிட்ட உணவு பாதுகாப்புத்துறை தற்போது, அப்படி ஏதும் இல்லை என பல்டி அடித்துளளது.

பொதுமக்கள் அச்சமின்றி தாராளமாக தர்ப்பூசணிப் பழங்களை சாப்பிடலாம். பழம் விற்பவர்கள் எங்களுக்கு எதிரி இல்லை. நான் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படவில்லை”  என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஸ் விளக்கம் அளித்துள்ளார்.

அண்மையில் கிருஷ்ணகிரியில் கூட ஒரு கடையில் தர்பூசணி பழம் தொடர்ந்து இனிப்பாக இருக்கிறது என்று சந்தேகம் அடைந்து உணவுப் பாதுகாப்பு துறையினர் சென்று ஆய்வு செய்ததில் அந்த பழங்களில் ஊசியின் மூலம் இராசயானம் கலந்திருப்பது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்திகள் பரவின. இதைத்தொடர்ந்து, அதிக  சிவப்பாக இருக்கும் தர்பூசணி பழங்களில் ரசாயணம் கலந்த ஊசி செலுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்களுடன் செய்திகள் பரவின.

ரசாயனம் கலந்த தர்பூசணிதான் அடர்சிவப்பு நிறத்தில் இருக்கும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி வெளியிட்ட விழிப்புணர்வு காணொலிதான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியிருந்தார். மேலும், அமைச்சர் மா.சுப்பிரமணியனும், இதுபோல, தர்பூசணியில் ஊசி செலுத்தி கலர் மற்றும் இனிப்பு சுவையை ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார்.

இதுபோன்ற தகவல்களால், தர்பூசணி விற்பனை பெரும் சரிவை சந்தித்தது. விவசாயிகள் கடுமையான வேதனைக்குள்ளாகினர். மேலும் தர்பூசணி பழங்களை சாப்பிட மக்கள் தயங்குவதால், அதன் விற்பனை பெருமளவில் குறைந்து விட்டதாகவும், சில வாரங்களுக்கு முன் ஒரு டன் ரூ.14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட தர்பூசணி பழங்களை இப்போது ரூ.3 ஆயிரத்துக்கு கூட வாங்க யாரும் முன்வருவதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். பல இடங்களில் தர்பூசணி பழம் விற்பனைக்காக அறுவடை செய்யும் பணிகளும் தடை பெற்றது.

மேலும் சமூக ஆர்வலர்கள்,  கெமிக்கல் கலந்த பாட்டில் குளிர்பானங்களை விற்பனை அதிகரிக்க,   குளிர்பான கார்ப்பரேட் கம்பெனிகளின்  சதி என்றும், இதற்கு தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாபபு துறை துணை போயுள்ளதாகவும் கடுமையாக குற்றசாட்டுக்கள் கூறப்பட்டன.

இதையடுத்து,  தோட்டக்கலை அதிகாரி தோட்டக்கலை அதிகாரிகள்,  அறுவடை செய்யப்பட்ட தர்பூசணி 5 நாட்களில் அடர்சிவப்பாக மாறிவிடும், அதனால் அது ரசாயணம் கலந்துந்து என கூற முடியாது என்று தெரிவித்ததுடன், இது தொடர்பாக பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தமிழக அரசு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் விவாதப்பொருளாக மாறிய நிலையில், உணவு பாதுகாப்புத்துறை பல்டி அடித்துள்ளது.  சென்னையில் ரசாயனம் கலந்த தர்பூசணி பழங்கள் எங்கேயும் இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்படாமல் தர்பூசணிகளை வாங்கி சாப்பிடலாம் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

கோடைகாலத்தில் வெப்பத்தின் கடுமையைப் போக்கவும், உடலுக்கு குளிர்ச்சி சேர்க்கவும் சாப்பிடப்படும் தர்பூசணி பழங்கள் குறித்து பரப்பப்படும் உண்மையற்ற செய்திகளால் பொதுமக்களிடம் தர்பூசணி பழம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. தர்பூசணி பழங்கள் இயல்பாக இளஞ்சிவப்பு நிறத்தில்தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக  செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார்,  சென்னையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ரசாயனம் கலந்த தர்பூசணி பழங்கள் (அடர் சிவப்பு பழங்கள்) கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால் அதேநேரம் சோதனையின்போது பல கடைகளில் கெட்டுபோன, எலி கடித்த, அழுகிப்போன பழங்கள் ஏராளமாகக் கிடைத்தன. அவற்றையெல்லாம் பறிமுதல் செய்து அப்போதே அழித்துவிட்டோம். எனவே பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை.

பொதுமக்கள்,. தாராளமாக தர்பூசணி பழங்களை நம்பி வாங்கி சாப்பிடலாம். இயற்கையாகவே தர்பூசணிக்கு என ஒரு கலர் இருக்கிறது. ஆனால் இளம்சிவப்பு இல்லாமல், மிகவும் சிவப்பான கலரில் இருந்தாலோ, அல்லது சாப்பிடும்போது அதிகமாக சர்க்கரை போல இனித்தாலோ அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கும்.

ஒருசிலர் செய்யும் தவறு இது. இதைத்தான் மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம். எனவே, மக்கள் குழப்பமடைய வேண்டாம். நாங்கள் விவசாயிகளுக்கு எதிரி அல்ல. சென்னையைப் பொறுத்தவரை தர்பூசணி பழங்கள் மிகவும் பாதுகாப்பானதாகவே இருக்கின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.