பாட்னா: இரண்டு குழந்தைகளுக்கு மேல் வைத்திருக்கும் தம்பதிகளின் வாக்குரிமையை ரத்துசெய்ய வேண்டுமென பேசியுள்ளார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்.
அவர் கூறியதாவது, “நாட்டின் மக்கள்தொகை அச்சமூட்டும் வகையில் பெருகிக் கொண்டுள்ளது. கடந்த 1947ம் ஆண்டிற்கு 2019ம் ஆண்டிற்கும் இடைபட்ட காலத்தில், நாட்டின் மக்கள்தொகை 366 மடங்கு பெருகியுள்ளது. ஆனால், அமெரிக்காவில் இதேகாலகட்டத்தில் 113 மடங்கு மட்டுமே பெருக்கம் நிகழ்ந்துள்ளது.
மக்கள்தொகைப் பெருக்கத்தால் நாட்டில் ஏகப்பட்ட சிக்கல்கள் உருவாகின்றன. எனவே, மக்கள்தொகை கட்டுப்பாட்டு சட்டத்தை அனைத்துக் கட்சிகளும் இணைந்து உருவாக்க வேண்டும். இதிலிருந்து எந்த மதத்தினர் மற்றும் பிரிவினருக்கும் விதிவிலக்கை அளிக்கக்கூடாது.
சிலர், தங்கள் மதக்கொள்கை குடும்பக் கட்டுப்பாட்டை அனுமதிக்கவில்லை என்பர். ஆனால், அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படக்கூடாது. இதேநிலை நீடித்தால், கலாச்சார வேறுபாடுகளின் அடிப்படையில், 1947ம் ஆண்டைப்போல் மற்றுமொரு தனி நாடு கோரிக்கையும் எழலாம்.
எனவே, 2 குழந்தைகளுக்கு மேலே வைத்துள்ள தம்பதிகளின் வாக்குரிமையை ரத்துசெய்ய வேண்டும்” என்று காரசாரமாக பேசியுள்ளார் கிரிராஜ் சிங். இவர், ஏற்கனவே சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.