விஜய் ரசிகர்கள் பேனர் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிகில் பாடல் வெளியீட்டு விழா, திரைப்பட வெளியீட்டின் போது பேனர்கள் வைக்க கூடாது என ரசிகர்களுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னதாகவே பலமுறை என்னை அழைத்து கண்டிப்பார். ரசிகர்கள் ஏன் இதை எல்லாம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள் ? இதற்கு அவர்களின் பெற்றோருக்கு உதவி செய்யலாமே ? என்றெல்லாம் கேட்டுள்ளார். கட்டவுட், பேனர் வைத்து ஏன் காசை வீணடிக்கிறார்கள் ? என்றும் அவர் கேட்டிருக்கிறார். சென்னையில் இப்படி ஒரு சோகச்சம்பவம் நடந்தேறியுள்ள நிலையில், திட்டவட்டமாக இனி வரும் காலங்களில் பேனர், கட்டவுட் வைக்க கூடாது என்றும் கடுமையாக கண்டித்திருக்கிறார். அதை மீறும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

முன்னதாக கடந்த வியாழக்கிழமை அதிமுக பிரமுகர் தனது இல்ல திருமண விழாவுக்காக வைத்த பேனர் விழுந்து, சுபஸ்ரீ என்கிற பெண் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.