சென்னை: தமிழ்நாட்டில் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில்,  ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழநாடு முழுவதும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு தற்போது ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஹெல்மெட் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால், இரவு பகல் பாராது ஆங்காங்கே மறைந்து நின்று காவல்துறையினர் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை ஓடிப்பிடித்து அபராதம் வசூலித்து வருகின்றனர். ஆனால், பல நேரங்களில் காவல்துறையினரே ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்கின்றனர். இது பேசும்பொருளாக மாறி வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் காவல்துறையினர் மீது கடும நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பணிக்கு செல்லும் போலீஸாரின் வாகனத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.மேலும், போலீசார் அடையாளத்தை காரணமாக கூறி வாக்குவாதம் செய்தால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.