நாமக்கல்: மாவட்டத்தில் கொரோனா ஆய்வு மேற்கொண்டுவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ரவுடித்தனம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இன்று நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, சட்டம், ஒழுங்கை காப்பதில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்று கூறியவர், ரவுடித்தனம் செய்பவர்கள் மீது தமிழகஅரசு கடும் நடவடிக்கை எடுக்கும் இதில் எந்தவித தயக்கமும் கிடையாது என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், மதுரை, திருச்சி மாவட்டங்களை தமிழகத்தில் 2வது தலைநகராக மாற்றுவது குறித்து அமைச்சர்கள் கூறி வருகிறார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்தவர்,
மதுரையை 2 வது தலைநகராக்குவது என்பது அமைச்சர் உதயகுமாரின் கருத்து; அது தமிழக அரசின் கருத்து அல்ல என விளக்கம் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 68 பணிகள் நிறை வேற்றப்பட்டுள்ளன என்று கூறியவர், அரசு கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என யாரையும் கூற வில்லை. ஆய்வுக்கூட்டத்திற்கு வருவோர் கொரோனா சோதனை எடுத்து, அதன் முடிவுகளை தெரிவித்து நிகழ்ச்சியில்பங்கேற்கலாம் என திமுகவின் குற்றச்சாட்டுக்கும் பதில் அளித்தார்.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கேள்வி: தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் – காவேரி உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்படுமா…
பதில்: – அந்த திட்டம் அரசின் ஆய்வில் இருக்கிறது. ஏன் என்றால், உயரம் அதிகமாக இருக்கின்ற காரணத்தினாலே, ஆய்வு செய்து தான் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும்.
கேள்வி: இரண்டாவது தலைநகரம் பற்றிய பேச்சு இப்போது அதிகமாக இருக்கிறது. அதைப் பற்றி அரசின் நிலைப்பாடு என்ன?
பதில்: அது அவருடைய கருத்து. அது அரசினுடைய கருத்து அல்ல.
கேள்வி: ஆந்திரப்பிரதேசத்தில் அம்மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதேபோன்று தமிழகத்திலும் செயல்படுத்தப்படுமா?
பதில்: அம்மாவுடைய அரசு, கொரோனா காலத்திலும் கூட புதிய புதிய தொழில்களை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து, இந்த கொரோனா காலத்திலும் அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இன்றைக்கு சிறுதொழில்கள் அதிகமாக இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு.
உலகத் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான தொழில் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். அந்தப் பணிகள் எல்லாம் நடைபெற்று கொண்டிருக்கின்றன. புதிய தொழில்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுகின்றோம், அடிக்கல் நாட்டுகின்றோம். அதன்மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
கேள்வி: வத்தல் மலை சுற்றுலா தலமாக அமைக்கப்படுமா…
பதில்: அது அரசினுடைய பரிசீலனையில் இருந்து கொண்டு இருக்கிறது. படிப்படியாக ஒவ்வொரு திட்டமாக நிறைவேற்றப்படும்.
மும்மொழிக் கொள்கை
கேள்வி: தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கைக்கு எதிராக உள்ள நிலையில் கோயம்புத்தூர் மாநகராட்சி பள்ளிகளில் இந்தி மூன்றாவது பாடமாக எடுக்க விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டுள்ளதே…
பதில்: இது தவறான செய்தி. இது குறித்து அனைத்து ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துவிட்டார். அந்த பார்மெட் தவறானது. போலி பார்மெட்டை வெளியிட்டு தவறான, அவதூறான செய்தியை பரப்பி இருக்கிறார்கள். அவ்வாறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவு வழங்கப்பட்டு இருக்கிறது.
மலர் சாகுபடி
கேள்வி: தருமபுரி மாவட்டத்தில் மலர் சாகுபடி அதிகமாக இருக்கிறது. அரசு போக்குவரத்திற்கு வசதி ஏற்படுத்தி கொடுத்தாலும், சந்தை வாய்ப்புகள் இல்லாததால் தோட்டத்திலே மலர்கள் கருகும் நிலை உள்ளது. மலர் சாகுபடிக்கு கர்நாடக அரசு வழங்கியதை போல தமிழ்நாடு அரசால் நிவாரணம் ஏதாவது வழங்கப்படுமா?
பதில்: தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் நம்முடைய வேளாண் பெருமக்கள் அதிகளவில் மலர் சாகுபடி செய்து வருகிறார்கள். இவர்களுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் சர்வதேச மலர் ஏல மையத்தை கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சுமார் 20 கோடி ரூபாயில் இந்த திட்டம் துவங்கப்பட இருக்கிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் உற்பத்தி செய்கின்ற மலர்களை அங்கே சென்று விற்பனை செய்து நல்ல லாபம் பெறலாம்.
கொரோனா வைரஸ் தொற்றால் விவசாயிகள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக தான் அம்மாவின் அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் கொடுத்தது. அதுமட்டுமல்லாமல், ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் கொடுத்தோம். அதேபோல அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் கொடுத்தோம். இப்படி எல்லா வகையிலும் அரசு உதவி செய்து வருகிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.
தி.மு.க.வுக்கு பதில்
கேள்வி: அரசு விழாவில் தி.மு.க. தரப்பிலிருந்து எம்.பி.யோ எம்.எல்.ஏ.வோ கலந்து கொள்ளாமல் இருப்பதால், தி.மு.க. தரப்பு இது அரசு விழாவா அல்லது அண்ணா திமுகவுடைய கட்சி நிகழ்ச்சியா என்று கேள்வி எழுப்புகிறார்களே…
பதில்: இது நிகழ்ச்சியும் அல்ல, விழாவும் அல்ல. கொரோனா தடுப்பு பணி இந்த மாவட்டத்தில் எப்படி நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்து ஆலோசனை வழங்குவதற்காகவும், அரசு அறிவித்த திட்டங்களை மாவட்ட நிர்வாகம் எவ்வாறு செயல்படுத்துகிறது என்பது குறித்தும் ஆய்வு செய்ய நான் வந்திருக்கிறேன். வேறு எதற்காகவும் அல்ல. இது விழா கிடையாது. இன்று உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கிற கொரோனா தொற்று நோய், தருமபுரி மாவட்டத்தில் முதலில் குறைவாகவும் தற்போது படிப்படியாக அதிகரித்தும் வந்தது. இந்த மாவட்ட நிர்வாகம் அதை கட்டுப்படுத்த எந்த அளவிற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை ஆய்வு செய்வதற்கு தான் நான் வந்திருக்கிறேன்.
கேள்வி: பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்காக திரைப்படத் துறையினர் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவரது உடல்நிலை குறித்து நீங்கள் கேட்டறிந்தீர்களா?
பதில்: மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரிடம் நான் ஏற்கனவே இது குறித்து விசாரித்து அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவரும், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையை அணுகி தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் குணமடைய வேண்டும் என்று எல்லோரும் பிரார்த்தனை செய்கிறார்கள். அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
சாலை விரிவாக்கம்
கேள்வி: தருமபுரி மாவட்டத்தில் சாலைகளை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. இது குறித்து…
பதில்: ஒவ்வொரு திட்டமாக நாங்கள் எடுத்து செயல்படுத்தி கொண்டு வருகிறோம். எல்லா திட்டங்களையும் ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியாது. புரட்சித் தலைவி அம்மா 2011–-ல் என்னை நெடுஞ்சாலை துறை அமைச்சராக நியமித்தார். 2011-லிருந்து எல்லா மாவட்டங்களிலும் பல்வேறு பாலங்களை கட்டியிருக்கிறோம். இன்றைக்கு கூட 297 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேலம்-, திருப்பத்தூர், -வாணியம்பாடி சாலையை நான்கு வழிச் சாலையாக மேம்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதேபோல ஊத்தங்கரை இருவழிச் சாலையை 302 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக மேம்பாடு செய்ய உள்ளோம். அரூர் புறவழிச்சாலை, பென்னாகரம் சாலை அகலப்படுத்தும் திட்டம் போன்று ஒவ்வொரு பகுதியாக சாலை விரிவாக்கம் செய்ய தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.