சென்னை: சமூக வலைத்தளங்களில் மோசடி செய்யும் நபர்கள் மீதும், பொய் செய்திகளை பரப்பும் நபர்கள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீப காலமாக தமிழ்நாட்டில், சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படுவது அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்காக தமிழ்நாடு காவல்துறையில் சைபர் க்ரைம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இது தொடர்பாக சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
இநத் நிலையில், சமூக வலைத்தளங்களில் மோசடி செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியளார்களை சந்தித்தவர், இணையத்தில் மோசடிகள் வித விதமாக நடக்கின்றன. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடிகளை செய்கின்றனர். பொய்யான விளம்பரங்களை இணையத்தில் பரப்புகின்றனர். அரசு வேலை வாங்கி தருவதாக இணையம் மூலம் பணம் வாங்கி மோசடி செய்யும் கும்பல்கள் உள்ளன. இதை மக்கள் சிலரும் கூட நம்பி ஏமாறுகின்றனர். நாம் பார்க்கும், கேட்கும் செய்திகளை அப்படியே நம்பி விட கூடாது. எதில் என்ன உண்மை இருக்கிறது என்பதை ஆராய வேண்டும். இதற்கு புத்தகங்களை படிப்பது அவசியம். பகுத்து அறிய கூடிய திறன், தெளிவான முடிவு எடுக்க கூடிய திறன் இதன் மூலம் கிடைக்கும்.
சிலர் இணையத்தில் தொடர்ந்து வதந்திகளை பரப்பி வருகிறார்கள். குறிப்பிட்ட கொள்கைகளில் தீவிரமாக ஈடுபாடு கொண்ட நபர்கள் இப்படி செய்கிறார்கள். இப்படி சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகளை பரப்புவது தவறு. இவர்களை கண்டறிந்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைத்தளங்களில் பொய்யான கருத்துக்களை பரப்ப கூடாது. இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களை கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.