சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 21ம் தேதி தொடங்கியது முதல் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் இறுதியில், பெய்த பேய் மழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பேரழிவு ஏற்பட்டது. அதிலிருந்து மக்கள் தற்போதுதான் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் நாளை, நாளை மறுநாள் என 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.