போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில், பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் பிரஹ்லாத் லோடி, தனது உறுப்பினர் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அம்மாநில சட்டசபையில் காங்கிரசின் பலம் மேலும் கூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
மணல் கொள்ளை தொடர்பாக நடந்த மோதலில், இவர் அரசு அதிகாரிகளை தாக்கியது தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில், பிரஹ்லாத் லோடிக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் வெற்றிபெற்ற பவாய் தொகுதியை காலியானதாக அம்மாநில சட்டமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார்.
சிறப்பு நீதிமன்றம் விதித்த இந்த தண்டனையை எதிர்த்து தான் உயர்நீதிமன்றம் செல்லப்போவதாகவும், சபாநாயகரின் இந்த முடிவு சர்வாதிகாரத்தனம் என்றும் சாடியுள்ளார் பிரஹ்லாத்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஒரு மக்கள் மன்றதத்தின் உறுப்பினர், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றால், அவர் தனது பதவியை தானாக இழப்பார். இந்த அடிப்படையிலேயே மத்தியப் பிரதேச சபாநாயகர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் மத்தியப் பிரதேச சட்டசபையின் பலம் 229 என்பதாகக் குறைந்துள்ளது. அதில், ஆளுங்கட்சியான காங்கிரசின் பலம் 115 என்பதாகவும், பாரதீய ஜனதாவின் பலம் 108 என்பதாவும் உள்ளது. இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து அதில் காங்கிரஸ் வென்றால், சட்டசபையில் அது பெரும்பான்மையுடன் திகழும்.