சென்னை:
வர்தா புயல் நாளை, சென்னையை ஒட்டி கரையை கடக்கும் என்பதால்  வட தமிழக கடற்கரையோர பகுதிகளில் பாதிப்பு இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:
“இன்றைக்கு மதியம் சென்னைக்கு கிழக்கே 330 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்த வர்தா புயல், மேற்கு நோக்கி நகர்ந்து பிற்பகலில் தெற்கு ஆந்திரா, வடக்கு தமிழக கடலோர பகுதியில் சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும்.
ஆகவே வட தமிழக பகுதியில் இன்று இரவில் இருந்து மழை பெய்யக்கூடும். இது படிப்படியாக அதிகரிக்கும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பல பகுதிகளில் மிககனத்த மழை பெய்யக்கூடும்.
சென்னைக்கு அருகே புயல் கரையைக் கடக்கும்போது 80 முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும்” என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து தமிழக அரசு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர்மா,  விழுப்புரம் வட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்துள்ளது.
அலுவலக ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கும்படியோ வீட்டிலிருந்தே பணி புரிய அனுமதிக்கும்படியோ தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
காற்று பலமாக வீசும்போது இந்த மாவட்டங்களில் மின்சாரம் தடை செய்யப்படும். புயல் காரணமாக மின் கோபுரங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. ஆகவே மற்ற மாவட்டங்களில் இருந்து மின் ஊழியர்கள் இந்த மாவட்டங்களுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் நேரத்தில் மக்கள் வீட்டிலிருந்து வெளியே வராமல் இருக்கும்படியும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
 
புதுவை அரசு அறிவிப்பு
பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து புதுவை அரசு அறிவித்துள்ளது. இப்பகுதிகளிலும் புயல் பாதிப்பு இருக்கலாம ்என்பதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.